ஹாமீம்
அம்மானை
அம்மானை - தோற்றம் :
அம்மானை என்பது சிறு பெண்கள் தத்தம் வீடுகளிலும் , வீதிகளிலும் ஆடி வருகின்ற ஒரு வகை
விளையாட்டு ஆகும். இதற்கென பயன்படும் காய்கள் விளையாட்டின் போது பாடப்பெறும் பாடல்கள்
ஆகிய இவை எல்லாமே அம்மானை என்றே அழைக்கப்படுவது மரபு .
நாட்டுப்புறப் பாடலாக இருந்து இலக்கியமாக ஏற்றம் பெற்ற பா வகைகளுள் அம்மானை குறிப்பிடத் தக்கது .
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால இலக்கியத்திலேயே கழங்கு ( அம்மானை )
ஆடிய செய்தி பேசப்பட்டுள்ளது . சங்கம் மருவிய காலத்தைச் சார்ந்த ( கி.பி. 2ம் நூற்றாண்டு )
சிலப்பதிகாரம் அம்மானை வரி என்னும் வரிப் பாடலை முதலில் தந்தது . கி.பி. 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த
திருவாசகத்தில் அம்மானை விளையாட்டுப் பற்றிய குறிப்பு வருகின்றது .
அம்மானை - சொற்பொருள் விளக்கம் :
அம்மானை = Ammanai - அம்மானை ; என்பதாக பொருள் தந்து , " குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட
பந்துகளை வைத்து , அவற்றை மேலே வீசியும் , கீழே விழுமாறு செய்தும் ஆடப்படும் ஒரு பெண்கள்
விளையாட்டு " எனவும் விளக்கம் தருகின்றது தமிழ் - லெக்ஸிகள் .
பக்தி நூல்களில் அம்மானை :
இசையோடு கூடி நெஞ்சில் நிலைக்கத் தக்கனவாகிய திருவாசகத் திருவம்மானைப் பாடல்கள்
இலக்கியச் செறிவோடு விளங்குகின்றன . பக்திச் சுவையில் அமைந்து , கதை தரும் பாங்கோடு விளங்கும்
திருவாசகத் திருவம்மானை தான் பிற்காலத்தெழுந்த அம்மானை வடிவம் பெற்ற ஞான நூல்களுக்கு
ஊற்றுக் கண்ணாக விளங்கியது எனலாம் .
கலம்பகம் ( சிற்றிலக்கியம் ) :
" கலம்பகம் " எனும் சொல் பல வகை மலரும் கலந்து தொகுக்குப்பட்ட மலர் மாலையைக்
குறிப்பதற்காகப் பயன்பட்டு வந்துள்ளது . கலம்பக இலக்கியம் பல்வேறு உறுப்புகளும் , யாப்பு வகைகளும்
விரவிவரப் பாடப்பட்டிருப்பதால் இப்பெயர் பெற்றது என்பர் .
கலம்பகம் எனும் சிற்றிலக்கியத்தில் அம்மானையும் ஓர் உறுப்பாக அமைந்துள்ளது.
கலித்தாழிசை எனும் பாவகையில் பாடப்பட்டு, மடக்கும் அமையப் பெரும் கலம்பக அம்மானை பாடலில் முதலில் ஒரு
பொதுக்கூற்று அமையும். அதனடிப்படையில் இரண்டாவது பெண் வினா எழுப்புவாள். மூன்றாவது பெண் பதிலிறுப்பாள். வினா
விடையாக, பெரும்பான்மையும் சிலேடைப் பொருள் முடிவுடன் கலம்பக அம்மானை அமைகின்றது.
தமிழில் எழுந்த முதல் கலம்பக நூல் கி.பி. 850 -ம் ஆண்டளவில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் பேரில்
எழுந்த நந்திக் கலம்பகம் என்பர் .
திருக்கோட்டாற்றுக் கலம்பகம் :
கோட்டாறு ஞானியார் சாகிபு பேரில் கொட்டாம்பட்டி எம். கருப்பையாப் பாவலரால் பாடப்பட்ட திருக்கோட்டாற்றுக்
கலம்பகத்தில் ,கோட்டாற்றில் நோயுற்று இறந்த ஆண் மகவொன்றை ஞானியார் அப்பா அவர்கள் மீண்டும் உயிர் பெற்றெழச்
செய்த அற்புத நிகழ்ச்சியை வியந்து பாடப்படுவதை பின் வரும் அம்மானை பாடல் மூலம் அறியலாம் .
" தத்தார் கலியுலகஞ் சாற்று புகழ்க் கோட்டாற்றார்
செத்தார் பிழைத்து வரச் செய்தனர்கா ணம்மானை "
என பொதுக்கூற்றாக முதலாவது பெண் கூறுகிறாள் ;
" செத்தார் பிழைத்து வரச் செய்தனரே யாமாகில்
இத்தா ரணியிலவர்க் கீடுண்டோ வம்மானை "
என்பது இரண்டாவது பெண் எழுப்பும் வினா ;
" ஈடெவரே மெய்யிலுயி ரேற்று வார்க் கம்மானை "
இது மூன்றாவது பெண்ணிறுக்கும் விடை .
இப்பாடல் ஐந்தடிளால் ஆனது. இரண்டாமடியும், மூன்றாமடியும்
மடக்கு நிலையில் அமைகின்றன . இறுதியடியில் சிலேடை நயம் உள்ளது .
ஞான அம்மானை :
தமிழில் இதுகாரும் வெளிவந்துள்ள அம்மானை நூல்களில் குமார தேவர் , ஞானியார் அப்பா ஆகிய இருவர் மட்டுமே
ஞான அம்மானை என்ற பெயரிலான இலக்கியங்களை பாடியிருப்பதாக தெரிய வருகின்றது.
பக்தி இலக்கியமாக அம்மானை அமைதல் என்பது அண்மைக் காலம் வரைத் தொடர்கின்றது .
ஞானியர் அப்பாவின் ஞான அம்மானை
ஞானியர் அப்பா அவர்களின் ஞான அம்மானை எனும் நூல் மெய்ஞானம் என்னும் பாடு பொருளை மையக் கருத்தாகக்கொண்டு , சூஃபிஸம் , நபிகள் நாயகத்தின் ஆதி ( துவக்க ) நிலை , அன்னார் நிகழ்த்திய அற்புதங்கள் , வாசி யோகம் முதலானவற்றை விளக்கிக்கூறுவதாக அமைந்துள்ளது .
- இல்லம்
- நம்மைப்பற்றி
- வரலாற்றுக்குறிப்புகள்
- ஞான அம்மானை
- இலக்கிய உத்திகள்
- சாஹிபு பாடல்கள்
- புகைப்படங்கள்
- முகவரி
மர்ஹும் V.S.T. சம்சு தாஸீன் (நிறுவனர்)
மர்ஹும் V.S.T. செய்யது தாமீம்
ஹஸரத் ஞானியர் அப்பா தர்கா பள்ளியில் திருப்பாடல், பணிவிடை நடைபெறும் விசேஷ இரவுகள்
- பிரதி வியாழன் மாலை வெள்ளி இரவுகள்
- நிறை பிறை இரவு
- 14 ஆம் இரவு
- மகான்கள் நினைவு தினங்கள்