ஹாமீம்
வரலாற்றுக்குறிப்புகள்
அறிமுகம்
தமிழகத்தைச் சேர்ந்த தக்கலை பீர் முஹம்மது ஒலியுல்லாஹ் (ஞானப்
புகழ்ச்சி முதலான 18 நூல்கள்), இராமநாதபுரம் - தொண்டி ஷெய்கு அப்துல் காதிறு ஆலிம் ஒலியுல்லாஹ் என்ற குணங்குடி மஸ்தான் சாகிபு (மஸ்தான் சாகிபு பாடல்கள்), கோட்டாறு ஞானியார் சாகிபு ஒலியுல்லாஹ் (மெய்ஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டு) காயல்பட்டினம் நூஹ் ஆலிம் ஒலியுல்லாஹ்
(வேத புராணம்) .மேலப்பாளையம் முகியித்தீன் பசீர் அப்பா ஒலியுல்லாஹ்
(மெய்ஞ்ஞான ஆனந்தக்களிப்பு) கோட்டாறு ஷெய்குத் தம்பி ஞானியார் (மெய்ஞ்ஞான விளக்கம்) செய்யது அப்துல் வாரிது ஆலிம் (காலங்குடி மச்ச ரேகைச் சித்தன் திருப்பாடல்) தென்காசி ரசூல் பீவி (ஞானாமிர்த சாகரம் ) போன்ற ஞான மேதைகள் பலரும் இஸ்லாமிய சூஃபி ஞானத்தை தமிழ்த் தேனில் குழைத்து பாக்கள் புனைந்து இறவா இலக்கியங்களாக நமக்கு வழங்கி சென்றுள்ளனர்.
ஞானியார் அப்பா அவர்களின் வரலாற்றுக் குறிப்புகள்
நாஞ்சில் நாடு என்பது இன்றைய குமரி மாவட்டத்திற்குட்பட்ட தோவாளை , அகத்தீசுவரம் என்னும் இரு கோட்டங்களும் இணைந்த நிலப்பகுதியாகும். நன்செய் வளம் செறிந்த இந்நன்னாட்டின் நடுவிடமாகத் திகழ்வது கோட்டாற்றுப் பழம்பதி ஆகும். ஏறத்தாழ எழு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இளங்கடை பகுதியில் இஸ்லாமியர் மனைகள் அமைத்து வாழத் தொடங்கியதிலிருந்து இவ்வூரின் பெருமை கடல் கடந்தும் பரவியது.
இப்பகுதியில் தோன்றிய சன்மார்க்க அறிவும், தமிழறிவும் வாய்க்கப்பெற்று பழுத்த சூஃபி ஞானப் புலவர் பெருமக்களாக திகழ்ந்த சான்றோர் பலர் தம் இலக்கிய படைப்புகளை உலகம் முழுவதும் உலவ விட்டிருக்கின்றனர். இக்கோட்டாற்றிலே மறை வேதங்களும், கலை ஞான நூல்களும் கற்றுத்தேர்ந்து சிறந்து விளங்கிய சான்றோர் வழி முறையில் தோன்றி வாழ்ந்து வந்த ஷெய்கு அபூபக்கர் சாகிபு அவர்கள் தமது ஊரில் வாழ்ந்து வந்த மவுலானா ஷெய்கு முகியித்தீன் சாகிபு அவர்களது புதல்வி நற்குணங்கள் நிறைந்த மாதரசி செய்யிது மீறான் பீவி அவர்களை மணம் புரிந்து அறமுறை வழுவாது வாழ்ந்து வருகையில் பீவி அவர்கள் கருப்பமுற்றனர்.
அன்றிரவு நித்திரையில் பூரண சந்திரன் வானத்தினின்றிறங்கி தமது மடியிலிருந்து நிரம்பிய சோதியோடு விளையாட பீவி அவர்கள் கனவு கண்டெழுந்து தமது கணவரிடம் சொல்ல, அவர்கள் இறைவனைத் துதித்து,"பூமியெங்கும் புகழ்ந்து பரவத் தக்க பற்பல அற்புத காரண ஞானச்செல்வமாய் ஒரு குழுந்தையை நீவிர் பெற்றெடுப்பீர்" என்றுரைத்தார். அது கேட்ட பீவி அவர்களும் இறைவனைத் துதித்து மகிழ்வுற்றிருக்க பத்து மாதமும் சென்று முன்னோர் தவமும், உலக மாந்தரின் பெரும் பேறும் ஒர் உருவெடுத்ததென்று சொல்லத்தக்க தகைமையுடன் ஹிஜிரி 1167ம் ஆண்டிலே (கிபி 1753 ) ஷெய்கு ஞானியார் சாகிபு ஒலியுல்லாஹ் அவர்கள் தோன்றினார்கள்.அன்னாரது இயற்பெயர் ஹலரத் ஷெய்கு முகியித்தீன் மலுக்கு முதலியார் என்பதாகும்.
ஞானியார் அப்பா அவர்கள் கல்வி பயிலும் பருவத்திற் பயிலாதும், உலக நடையிற் பற்றாதும், பரம சிந்தனையிலேயே மவுனமுற்றுப்
பதினான்கு வயது வரை காலம் கழித்து வந்தார்.ஹிஜிரி மூன்றாம் நூற்றாண்டளவில் (கி.பி. 9ம் நூற்றாண்டு ) பாரசீக (ஈரான்) நாட்டில்
அவதரித்து மெய்ப்பொருள் நிலை நன்குணர்ந்து தெளிந்த சூஃபி ஞானியாகிய மன்ஸூர் ஹல்லாஜ் அவர்களுடைய சீடர்களில் ஒருவராகிய குதுபுஸ்ஸமான் மெளலானா செய்யிது தாமீம் இபுனு செய்யிது ஜமாலுல் மிஹுபரிய்யி அவர்கள் அக்காலத்தில் கோட்டாற்று
பாவா காசிம் ஒலியுல்லாஹ் அவர்கள் பள்ளிவாசலில்( வேம்படி பள்ளி ) துறவிக் கோலம் பூண்டு தங்கியிருந்து அற்புத செயல்கள் நிகழ்த்தி வந்தார்.
பாவா காஸிம் ஒலியுல்லாஹ் பள்ளி
கோட்டாறு
வேம்படி பள்ளியின் உள்புறம் அமைந்துள்ள ஐந்து நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம் (கோட்டாறு)
பள்ளிக்கு வந்து தம்மை சந்தித்த ஞானியார் அப்பா அவர்களை தம் பக்கத்தில் இருத்தி தெளிந்த ஞானங்களடங்கிய சுர்யானி மொழி நூல் ஒன்றைத் தமது பையிலிருந்து எடுத்துக் கொடுத்து படிக்கும் படி அதட்டிக்
கூறவே, ஒரு பாஷை எழுத்தும் கற்றுக்கொள்ளாத ஞானியார் அப்பா அவர்கள் அந்த நூலை முன் கற்றுத் தேர்ந்தவர்களைப் போல வாசித்தார்கள். பின்பு செய்யிது தாமீம் அவர்கள் சாகிபு அவர்களை நோக்கி "எமது குரு நாதர் செய்யிதுனா ஹல்லாஜ் ரஹ்மத்துல்லாஹ் அவர்களது உத்தரவின் படி பதினோரு மாத பிரயாணத் தூரத்திற்கப்பாலிருந்து வந்து
உமக்கு போதிக்கலானேன். ஆதலால் இன்று முதல் வல்ல இறைவன் உமக்கு வல்லமைகள் அனைத்தையும் தருவானாக!" என்று ஆசீர்வதித்தும், நன்முறை போதித்தும் முரீது என்னும் ஞான தீட்சை
உபதேசஞ் செய்தும், பின்னொரு நாளில் தம்மை சந்திக்குமாறும் கூறி விட்டு சென்றனர்.
பின்னர் சாகிபு அவர்கள் குரு உபதேசப்படி நடந்து, முன்னர்க் கற்றுக் கொள்ளாத குர்ஆன் முதலிய வேத சாத்திரங்களின் இரகசியார்த்தங்களை யாவருக்கும் போதிப்பதும், சில வேளைகளில் ஜதுபு என்னும் தன்னை மறந்த ஆனந்த பரவசமுண்டாகி அடர்ந்த காடு, மலைகளில் புகுந்து கந்த, மூல பலாதிகளை ( தாவரங்களின் வேர், பட்டை, கிழங்குகளை ) உண்பதும், யோக ஞானானுபவ நிட்டையிலிருப்பதும், ஒவ்வொரு காலத்தில் வீட்டிற்கு வருவதுமாகப் பதினாறு வயது வரை காலம் கழித்து வந்தார்கள் .
குருபிரான் முன்னர் கூறிய படி இரமநாதபுரம் மாவட்டம் மணன்மேற்குடி சத்திரத்தில் ஞானியார் அப்பா அவர்கள் அன்னாரைக் கண்டு அவர் தம் அனுக்கிரகத்தால் ஆன்மீக உலகிலே நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களையும் , அலி (ரலி) அவர்களையும், சற்குரு மன்ஸுர் ஹல்லாஜ் (ரஹ்) அவர்கள் உள்ளிட்ட இறை நேச செல்வர்களையும் கண்டு மறை உண்மைகள் போதிக்கப் பெற்றார் .
ஞானியார் அப்பா அவர்கள் குருவின் ஆணைப்படி முதன்முதலாக கமுதி எனும் ஊரில் தீவினைகள் புரிந்து வந்த இருவரை நல்வழிப்படுத்தி தீட்சை அளித்தார்கள். அவ்வூரில் தங்கியிருந்த போதே மெய்ஞ்ஞானத்திருப்பாடல்களைப் பாடத்துவங்கினார். பின்னர் கோட்டாற்றுக்கு திரும்பி வருகின்ற வழியில் மேலப்பாளையம் எனும் ஊரில் அமைந்திருக்கும் கலிமாக்குளக்கரையில் தங்கியிருந்து சடை அப்துல் காதிறு என்பாருக்கு தீட்சை வழங்கினார். (ஞானியார் அப்பா அவர்கள் வந்து சென்றதை நினைவு கூரும் விதமாக மேற்கண்ட இடத்தில் காலஞ் சென்ற V.S.T. சம்சு தாஸீன் (பங்களா அப்பா) அவர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக கட்டுவித்த ஞானியார் அப்பா தைக்கா உள்ளது)
மர்ஹும் V.S.T.
சம்சு தாஸீன் (பங்களா அப்பா )
ஞானியார் அப்பா தைக்கா - ( ஹாமீம்புரம் ) மேலப்பாளையம்
கோட்டாறு வந்தடைந்த ஞானியார் அப்பா அவர்கள் குருபிரான் கட்டளைப்படி நேமநிஷ்டைகளைத் தவறாது நடத்தி, ஜமாத்துல் அவ்வல் மாதம் ஒன்றாம் நாள் முதல் நாள்தோறும் தங்களின் சீடர்களான பரிவாரத்தோடு கூடி மவ்லூது, பாத்திஹா, திக்று, சலவாத்து, அவுறாத்து முதலிய வணக்கங்கள் செய்து 18 ஆம் நாளன்று கந்தூரி கொடுத்து வந்தார்.நற்போதனை செய்தும், அற்புத செயல்கள் பல புரிந்தும் மக்களை நல்வழிபடுத்தினார். உரிய வயதில் நற்குல மங்கையர் இருவரை மணமுடித்து மழலைச் செல்வங்களும் வாய்க்கப்பெற்றார்.
சேர நாட்டை ( கேரள மாநிலம் ) சேர்ந்த செய்யது முகம்மது புகாரி தங்கள், காயல்பட்டினம் உமறு ஒலியுல்லாஹ் போன்ற இறை நேச செல்வர்கள் ஞானியார் அப்பா அவர்களது அறிமுகம் பெற்று ஆத்மார்த்த ஞான விஷயங்களை பரிமாறிச் சென்றுள்ளனர் .
இவ்வாறாக காலம் கடந்து வந்து, பின்னர் இறைவன் கட்டளைப்படி தங்களுக்கு மறைவு நாள் நெருங்கியதை அறிந்து தமது சகோதரராகிய இளைய ஞானியார் ஷெய்கு உதுமான் ஆலிம் என்பாரை அழைத்து அவருக்கு அதனை அறிவித்தார். தாம் நடத்தி வந்த ஹஜரத் மன்ஸுர் ஹல்லாஜ் (ரஹ்)
அவர்களது ஞானப்பாட்டைக்கு பட்டத்திற்குரியவராகத் தம் இளவலையே நியமித்து குருத்துவசாசனமீந்தருளினார்.
பின்னர் தம் இளவலிடம் "யோக ஞான அனுட்டானங்களின் நிலை
கண்ட வல்லவரும் நமது நெறி நிலையாதிகளை உணர்ந்த நண்பருமான காயற்பட்டினம் ஹாஜி உமறு லெப்பை ஆலிம் சாகிபு அவர்கள் இன்னும் சில நாளில் இங்கு வருவார்கள்.அவர்கள் நட்பை விடாது கைக்கொண்டு எந்த காரியங்களையும் அவர்கள் பால் யோசித்து நடத்திக் கொள்" என்றும் " நான் வருகிற வெள்ளிக்கிழமை இரவு உபாத்தாகுவேன் ( இவ்வுக வாழ்வை நீத்தல் ). அன்றிரவு நீ வெளியிற் செல்.அப்போது ஓர் ஒளியுண்டாகி உனக்கு முன் செல்லும்.அது சென்று அமையுமிடம் எதுவோ, அதை விலை கொடுத்து வாங்கி அதில் நம்மை அடக்கம் செய்யென்றும் கட்டளையிட்டுப் பின் நடத்தற்குரியவைகளை போதித்தும், வருவனவற்றை அறிவித்தும் ஹிஜிரி 1209 ஆம் வருடம் (கிபி. 1794 ) ஜமாத்துல் அவ்வல் மாதம் 14 வெள்ளிக்கிழமை இரவு ஹக்குத்தஆலாவின் கற்பனைக்குத் தலை சாய்த்து அவனது பரிசுத்த திருச்சமுக சன்னிதானத்தைச் சேர்ந்தார்.
இளைய ஞானியார் அவர்கள், ஞானியார் அப்பா அவர்கள் முற்குறித்தபடி சென்று ஒளி போய் அமைந்தவிடத்தை யறிந்து விலை கொடுத்து சாகிபு அவர்களை வேத நெறிப்படி செய்யத்தக்க கிரியைகளை செய்து முடித்து, அத்தலத்தில் அடக்கம் செய்வித்தார்கள்.பின்னர் சாகிபு அவர்களை அடக்கிய ஸ்தலத்தில் அழகிய தறுகா முதலிய கட்டிடங்கள் கட்டி அவர்கள் சொல்லிய கற்பனையினும் நடத்திய செய்கைகளினும் அணுவளவும் தவறாது
பலவித அற்புதங்களோடு தங்கள் தரீக்கை யாவருக்கும் விளக்கிக் காட்டி எங்கும் புகழ்ந்து பரவும் படி நடத்தி வந்தார்கள்.
ஞானியார் அப்பா அவர்கள் சமாதியுற்றிருக்கும் தர்கா - கோட்டாறு
அது போலவே அவர்கள் சந்ததியார்களும் இது பரியந்தம் நடத்தி இகபர செளக்கிய பரம ஞானாதீத வாழ்வுக்குரியவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள்.
ஞானியார் அப்பா நிகழ்த்திய அற்புதச் செயல்கள்
திருவாங்கூர் சமஸ்தானம் நாஞ்சில் நாட்டில் மழையின்றி ஏற்பட்ட
பஞ்சத்தைப் போக்குவதற்காக மந்திரியின் வேண்டுகோளுக்கிணங்க மழை பொழியச் செய்தது.
திருவாங்கூர் மகாராஜா முன்னிலையில் அனேக நம்பூதிரிகள்
முதலியோர் கூட்டத்துடன் இதிகாசப் பாராயணம் நடந்து கொண்டிருந்த போது " பாராயணம் பிழைபட்டது என்று கூறி சுவடிகளிலிருந்த
பிழைகளைச் சுட்டிக் காட்டித் திருத்தி அதற்குரிய பயன்களையும் விளக்கியது.
கோட்டாற்றில் கதீபு வலிய மன்னான் அகுமது லெப்பை என்பாருடைய புத்திரியின் ஆண் குழந்தை வளர்ந்து வருங்காலத்தில் நோயுற்று
இறந்துவிட, தம்மிடம் அழுது முறையீடு செய்த அவருடைய வீட்டிற்குச் சென்று அக்குழந்தையை மீண்டும் உயிர்பெற்றெழச் செய்தது.
இராமநாதபுரம் சமஸ்தான சேதுபதியின் பரிவாரங்களைச் சேர்ந்த
வேலைக்காரர் ஒருவரின் துண்டிக்கப்பட்ட கையை அற்ற கையோடு மீண்டும் வைத்துப் பொருத்தியது .
கோட்டாற்றைச் சேர்ந்த சங்கர நயினார் செட்டியார் என்பாருக்குத்
தங்களிடம் இருந்த சவுக்கத்துண்டை எடுத்து தூக்கித் திரை போல் விரித்து, அதிலே சுசீந்திரம் தாணு மூர்த்தி நடனம் காணச் செய்தது.
தம்மீது அழுகாறுள்ள சிலர் வந்து ஞானியென்பதுண்மையாயின் குளத்து நீரை வற்றச் செய்யுமெனக் கேட்டதற்கு, பெருமாள் குளத்து நீரை வற்றச்செய்து, மீண்டும் நீரை வெளி வரச் செய்தது.
கோட்டாறு - பெருமாள் குளம் ( தற்பொழுது விளையாட்டுத் திடலாக உள்ளது )
கமுதியில் தமது மகிமையை வெளி விடாது காலம் நோக்கி கூலி வேளை செய்து போது கழித்து வந்த போது, சந்தைக்கு கூட்டிச்சென்ற இருவர் தம் தலை மீது பெரும் பாரமாய் தூக்கி வைத்த சரக்குகளைச் சுமந்தவாறு பெரு மழையிலும் நனைந்து விடாமலும், சற்றும் நில்லாமலும் கமுதியாற்றில் பிரவாகித்து வந்த பூரண வெள்ளத்தில் பூமியில் நடப்பது போல் நடந்தும், தலைச்சுமை ஒரு முழத்திற்குமேல் அந்தரமாய் போனதும் அக்கரையில் நின்று விட்ட அவ்விருவரையும் தம் தலைச்சுமையையே தெப்பமாக்கி அவர்களை அதில் ஏறச்செய்து இக்கரை சேர்ப்பித்ததுமான நிகழ்ச்சி.
பரவிச் சிறந்த ஞான வழி
ஞானியார் அப்பா அவர்கள் போதித்த மன்ஸூர் ஹல்லாஹ் ( ரஹ்) அவர்களது ஞான வழி முறையைப் பின்பற்றி நடந்திடும் சீடர் பெருமக்கள் கோட்டாறு, திருவாங்கூர், கமுதி, தேரூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், ஏர்வாடி, மேலப்பாளையம், ஆளூர், தற்களை, திட்டுவளை, தோவாளை, திருவனந்தபுரம்,பறக்கை, சுசீந்திரம் மற்றும் பல்வேறூர்களிலும்
நிறைந்து வாழ்கின்றனர்.
ஞானியார் அப்பா அவர்கள் மீது பாடப்பட்ட புகழ் மாலைகள்
- திருக் கோட்டாற்றுக் கலம்பகம் (கொட்டாம்பட்டி எம். கருப்பையா
பாவலர்) - தோத்திரப்பா (நெல்லை - சாத்தான்குளம் சி.வெ. அரவமூர்த்தி
உபாத்தியாயர்) - தியான மஞ்சரி (கமுதி கா. மீறானயினார் புலவர் )
- திருக்கோட்டாற்றுப் பிள்ளைத்தமிழ் ( கோட்டாறு சதாவதானி
கா.ப. செய்கு தம்பி பாவலர் ) - திருக்கோட்டாற்றுப் பதிற்றுப் பத்தந்தாதி ( கா.ப. செய்கு தம்பி பாவலர் )
சதாவதானி கா.ப. செய்கு தம்பி பாவலர்
( ஞானியார் அப்பா அவர்களின் பெண் வழிப் பேரர் )
- இல்லம்
- நம்மைப்பற்றி
- வரலாற்றுக்குறிப்புகள்
- ஞான அம்மானை
- இலக்கிய உத்திகள்
- சாஹிபு பாடல்கள்
- புகைப்படங்கள்
- முகவரி
தர்கா நிர்வாகிகள்
- மர்ஹும் V.S.T. சம்சு தாஸீன்
- மர்ஹும் V.S.T. செய்யது தாமீம்
- மர்ஹும் ஹாஜி V.S.T.சம்சு தப்ரேஸ்
- V.S.T. அமீர் அம்சா
கிலாபத்
- ஞானியார் சாஹிபு
- இளைய ஞானியார் சாஹிபு
- __ ஆண் வழி முறையினர்
கடவுள் துதி
பூரணம் நிறைந்து பொங்கிப் புகழொளி
மணிய தாகிக்
காரணம் நிறைந்து நின்றங் கருத்துறு
கிருபை பொங்கி
ஆரணம் மறைநூல் வேதத் தருமுறை
தனக்கு மூலச்
சீரணத் திறசூல் தம்மைச் செவ்வென வமைத்தான் வல்லோன்
- கோட்டாறு ஞானியார் சாஹீப்
ஹஸரத் ஞானியர் அப்பா தர்கா பள்ளியில் திருப்பாடல், பணிவிடை நடைபெறும் விசேஷ இரவுகள்
- பிரதி வியாழன் மாலை வெள்ளி இரவுகள்
- நிறை பிறை இரவு
- 14 ஆம் இரவு
- மகான்கள் நினைவு தினங்கள்