ஹாமீம்
இலக்கிய உத்திகள்
4 .0 முன்னுரை :
ஞானியர் அப்பா அவர்களின் ஞான அம்மானை எனும் நூல் மெய்ஞ்ஞானம்
என்னும் பாடு பொருளை மையக் கருத்தாகக்கொண்டு , சூஃபிஸம் , நபிகள் நாயகத்தின் ஆதி
( துவக்க ) நிலை , அன்னார் நிகழ்த்திய அற்புதங்கள் , வாசி யோகம் முதலானவற்றை விளக்கிக் கூறுவதாக
அமைந்துள்ளது. நூலின் மையக்கருத்தினை விளக்குவதற்கு பல்வேறு இலக்கிய உத்திகளை
ஞானியார் அப்பா அவர்கள் அழகுற கையாண்டுள்ளார் .
4 .1 இலக்கிய உத்திகள் :
இலக்கியம் படைக்கும் படைப்பாளிகள் தாங்கள் கூறும் கருத்துகள் , கொள்கைகள் , கூற
வரும் செய்திகள் போன்றன மக்களை நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில்
கையாண்ட பல வழி முறைகள் உத்திகள் ( Techniques ) என்று அழைக்கப்படுகின்றன.
உவமை, உருவகம் , அணியழகு முதலியன போன்றே உத்தி என்பது இலக்கியம் சிறந்து
விளங்கிட ஒரு அணியாக உருப்பெற்றது .
ஞான அம்மானையில் காணப்படும் எதுகை , இயைபு , உவமை , உருவகம் , வருணனை
முதலான உத்திகள் அனைத்துமே இலக்கிய நயம் தருவனவாகும் .
4 .2 மெய்ஞ்ஞான இலக்கியங்களின் தன்மைகள் :
இஸ்லாம் மார்க்கத்தின் கடவுள் கொள்கை ஓரிறைக் கோட்பாடாகும் . நபிகள் நாயகம்
முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் திருத் தூதராக இருக்கின்றார்கள் இதுவே இஸ்லாத்தின்
மூல முதற் கொள்கையாகும் . இஸ்லாமிய இலக்கியங்களும் இந்த கொள்கைக்கிணங்கவே தொன்று
தொட்டு படைக்கப்பட்டு வருவனவாகும் .
இந்த வகையில் ஞானியார் அப்பா அவர்கள் இஸ்லாமிய கொள்கை வழி நின்று தமிழ் மொழி
இலக்கண மரபு மீறாமல் தனது மெய்ஞ்ஞான இலக்கியத்தைப் படைத்துள்ளார் என்பதற்கு புலமை
நயம் மிகுந்த அவரது அம்மானைப் பாடல்களே தக்க சான்றாகும் .
1 . முன்னிலை குரு உத்தி மரபு :
ஞான அம்மானை பாயிரத்தில் அமைந்த காப்புச்செய்யுளில் தமது குருவான மன்சூர்
ஹல்லாஜ் அவர்களை முன்னிருத்தி நபிகள் நாயகம் அவர்களை காப்பாக வைத்துப்பாடும் உத்தி ,
தக்கலை பீர் முஹம்மது அப்பா அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய மெய்ஞ்ஞானத்
திருபாடற்றிரட்டில் இடம் பெற்ற ஞான மணி மாலையில் பின் வரும் பாடல் முன்னிலை குரு உத்தி
மரபிற்கு ஒத்திருக்கின்றது .
" குருக்களற்ற ஞானமுங் குணங்களற்ற சீஷனுங்
கருக்களற்ற வித்தையுங் களங்கமற்ற புத்தியு
முருக்கமற்ற நெஞ்சமு முணர்ச்சியற்ற விவையெலாஞ்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ச்சியற்ற தொக்குமே "
இந்த மரபிற்கேற்ப குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் தமது குருவான முஹைதீன் ஆண்டகை அவர்களை முன்னிலைப்படுத்தி பாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும் .
2 . சுருங்கக்கூறல் மரபு :
ஞானியர் அப்பா அவர்கள் தமது காப்புச் செய்யுளில் நபிகள் நாயகத்தின் தோழர்களான
அபுபக்கர் , உமர் , உதுமான் , அலி ஆகிய நான்கு கலிபாக்களின் பெயர்களைத் தனித்தனியாகக்
குறிப்பிடாது " நால்வர் " என்று போற்றுகின்றார் .
" சீறாப் புராணம் " என்னும் பெருங் காப்பியம் படைத்த உமறுப் புலவர் அவர்கள் தமது
காவியத்தில் நான்கு கலிபாக்களையும் தனித் தனியான நான்கு பாடல்களில் குறிப்பிடுகின்றார் .
அம்மானை என்பது சிற்றிலக்கியம் ஆதலால் ஞானியார் அப்பா அவர்கள் " நால்வர் " என்பதாக
குறிப்பிடுவதன் மூலம் " சுருக்கி உரைத்தல் " என்னும் உத்தியை கையாண்டுள்ளார் எனலாம் .
3 . சிறப்பு உத்தி :
மெய்ஞ்ஞான இலக்கியம் படைப்போர் தமது ஆன்மீக குருவையும் , இறை நேசச் செல்வர்
முகைதீன் அப்துல் காதர் ஜீலானி ( ரலி ) அவர்களையும் போற்றித் துதித்தல் மரபாகும் . ஞானியார் அப்பா அவர்கள்
உவைசுல் கற்னீ (ரலி ) எனும் இறை நேசச் செல்வரையும் குறிப்பிட்டு போற்றியுள்ளார் .
உவைசுல் கற்னீ ( ரலி ) அவர்கள் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களது காலத்தில்
வாழ்ந்தவர்களாயினும் அன்னாரை நேரில் கண்டவர் அல்லர் . எனினும் நபிகளாரின் மீது கொண்ட
பேரன்பின் காரணமாக உவைசுல் கற்னீ அவர்கள் " ஆஷிக்கே றசூல் " ( நபிகளார்
மீது ஆழ்ந்த மெய்யன்பு கொண்டவர் ) என அழைக்கப்படுகின்றார் . எனவே சூஃபியர் என்னும்
மெய்ஞ்ஞானியர் உவைசுல் கற்னீ அவர்களை தமது முன்னோடியாகக் கொள்வர் .
சூஃபி ஞானியாகிய ஞானியார் அப்பா அவர்கள் தமது பாயிர காப்புச் செய்யுளில் உவைசுல் கற்னீ
அவர்களையும் போற்றியுள்ள பாங்கு ஏனைய புலவர் பெருமக்கள் கையாண்டிராத சிறப்பு ( புதிய )
உத்தியாகும் .
4 . சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் :
ஞான அம்மானையின் முதல் பாடலில் ஞானியார் அப்பா அவர்கள் , அனைத்து
படைப்பினங்களிலும் பேரொளிச் சுடராக நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் விளங்குகின்றார்கள் என்றும் அன்னாரது பேரொளிச்
சுடரை ஒளி வீசும் பிறைச் சந்திரன் வந்து போற்றியது என்றும் குறிப்பிடுகின்றார் . இந்த நிகழ்ச்சியை சீறாப்புராணத்தில்
உமறுப் புலவர் அவர்கள் 279 விருத்தங்களில் இரண்டு படலங்கலாக பாடியுள்ளார் .
மேற்கண்ட அற்புத நிகழ்ச்சியினை ஞானியார் அப்பா அவர்கள் பின் வரும் ஐந்து அடியிலான
கலித்தாழிசைப் பாடலொன்றில் குறிப்பிடுவதன் மூலம் " சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் "
என்னும் உத்தியைக் கையாண்டுள்ளார் .
உலக உயிரினங்களின் ஒளியாக விளங்கும் பேரொளியான நபிகள் நாயகம் ( ஸல் )
அவர்களூக்கு பிறைச் சந்திரனின் பேரொளி முன் வந்து தலை வணங்கியது என்ற சிலேடையும்
இந்தப் பாடலில் உள்ளது .
5 . மோனை :
மோனை என்பது முதலெழுத்து ஒன்றி வரத்தொடுப்பதாகும் .
1 . " ஆறிடையும் நாலிடையும் அருட்புராண வேதம்
ஆய்ந்து பதினெண்பாஷை யறிந்துணர்ந்த வல்லோர் "
( பாயிரம் பாடல் எண் 12 : அடி 3 - 4 )
இவ்வடிகளில் முதற் சீர்களின் முதலெழுத்து " ஆ " ஒன்றி வந்து அடி மோனை ஆயிற்று .
2 . " முத்திரைப் பொருள் முடிவினில் முச்சுடராகி "
( பாயிரம் பா . எ . 5 : அடி 1 )
இவ்வடிகளிலுள்ள மூன்று சீர்களின் முதலெழுத்துக்கள் " மு " ஒன்றி வந்து சீர் மோனை ஆயிற்று .
இது போன்ற மோனை அமைப்பு ஞான அம்மானையில் பரவலாக அமைந்துள்ளது .
6 . எதுகை :
எதுகை என்பது செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதாகும் .
1 . " காலில்லா தோடிக் கரமில்லா தேயெடுத்துக்
கோலில்லா தூன்றுங் குறிப்பறியா ரம்மானை "
( அம்மானை நூல் பா . எ. 30 : அடி 1 - 2 )
இப்பாடலில் அடிதோறும் இரண்டாம் எழுத்து " லி " ஒன்றி வந்து அடி எதுகை ஆயிற்று .
2 . " காலறியார் மாலறியார் கையறியார் மெய்யறியார் "
( அம்மானை நூல் பா . எ . 21 : அடி - 1 )
இப்பாடலில் முதல் இரு சீர்களின் இரண்டாவது எழுத்து " ல " ஒன்றி வந்து சீர் எதுகை
ஆயிற்று .
7 . இயைபு :
செய்யுளில் அடிகளின் இறுதியில் சொற்கள் அல்லது எழுத்துக்கள் ஒன்று போல் இருக்கும்
வகையில் அமைப்பது இயைபுத்ததொடை ஆகும் .
இயைபு : ( சொல் )
1 . " காலறியார் மாலறியார் கையறியார் மெய்யறியார் "
( அம்மானை நூல் பா.எ. 21 - அடி - 1 )
இந்தப் பாடலில் ( சொல் ) இயைபு அமைந்துள்ளது .
இயைபு : ( எழுத்து )
2 . " அஹதுமுத லானபடைப் படங்கலுக்கும் நம்மிறசூல்
வுஹதுமுத லாயிருந்த வுண்மை காணம்மானை "
( அம்மானை நூல் பா . எ. 19 : அடி 1 - 2 )
இந்தப் பாடலில் ( எழுத்து ) இயைபு அமைந்துள்ளது .
8 . உவமை :
வெவ்வேறு வகையைச் சேர்ந்த இரு பொருட்களை , ஒன்று அல்லது பல கூறுகளிலுள்ள
ஒப்புமை காரணமாக ஒன்றினைப் போல் பிறிதொன்று இருப்பதாகத் தொடர்புபடுத்திக் கூறுவதாக
அமைவது உவமை ஆகும் .
வினை உவமை :
1 . " எண்ணெய் கறுப்பா யிருக்குமந்தக் கூரிருளில் "
( அம்மானை நூல் பா . எ . 3 : அடி 1 )
என்னும் உவமையில் ( கரிய ) எள்ளில் இருந்து எண்ணெய் உருவானது போல் இருளில் ஓர்
ஒளி வந்து இறைவனைத் துதித்த பின்னர் படைப்புகள் உருவாயின என்று குறிப்பிட்டுள்ளார் .
இதில் உருவாதல் என்பது வினை உவமை ஆகும் .
பயன் உவமை :
2 . " பனித்துளிபோற் பாய்ந்து பாரவுரு வாய்மனுவாய் "
( அம்மானை நூல் பா . எ . 59 : அடி 1 )
என்ற பாடலின் உவமையில் ஞானியார் அப்பா அவர்கள் பனித்
துளியை உவமையாகவும் , மானிட உருப்பெருவதை பயனாகவும் நயம்பட உரைக்கின்றார் .
மெய்யுவமை :
வடிவம் , அளவு என்ற அடிப்படையில் மெய்யுவமை பிறக்கும் .
3 . " எல்லவரு மிசைத்ததென்ன மாணிக்கக் கற்றனக்கு மிசையா யொப்புக் கல்லதனை வைத்ததுபோ லடியேனுட் "
( பாயிரம் பா. எ . 9 : அடி 2 - 3 )
என்ற அவையடக்கப் பாடல் வரிகளில் ஞானியார் அப்பா அவர்கள் பெரியோர்கள் பாடியவை மாணிக்க கற்களுக்கு
ஒப்பானவையென்றும் , தாம் பாடியவை அற்பமான வெறுங்கற்களுக்கு ஒப்பானவையென்றும் குறிப்பிடுவதன் மூலம் மெய்யுவமை
புலனாகின்றது .
உருவுவமை :
நிறம் , குணம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவுவமைகள் பிறக்கும் .
4 . " பச்சை சிவப்புப் பாய்ந்த வெளுப்போடு
( அம்மானை நூல் பா . எ . 4 : அடி 1 )
என்ற பாடல் வரியில் பச்சை , சிவப்பு , வெள்ளை என்ற நிறங்களை குறிப்பிடுவதன் மூலம் சத்துவம் , ராஜஸம் , தாமஸம்
என்ற முக்குணங்களின் இயல்பினை உணர்த்துகின்றார் .
இதன் மூலம் நிறங்களின் அடிப்படையிலான உவமைகளைக் கையாளுகின்றார் .
9 . உருவகம் :
உருவகம் என்பது அடக்கிச் செறித்த உவமை ( Metaphor ) என்பர் .
" காலில்லா தோடிக் கரமில்லா தேயெடுத்து "
( அம்மானை நூல் பா . எ . 30 : அடி 1 )
என்ற பாடல் வரிகளில் ஞானியார் அப்பா அவர்கள் மெய்ப்பொருள் பற்றிய நினைவிலேயே [ கால்களின்றி ] எண்ணத்தை யோடச்செய்து ,
குருவின் நல்லருளால் அதனை அடைவதற்குரிய வழி முறைகளை [ கரங்களின்றி ] தெரிந்தெடுத்து, அந்நெறிமுறைகளிலே [ கோலின்றி ]
நிலைத்தூன்றி நின்றிடும் திறம் பற்றி குறிப்பதனை பலரும் அறிய மாட்டார்கள் என்று எதிர் மறை உணர்வினை உணர்த்தும்
உருவகங்களை அழகுற கையாளுகின்றார்.
10 . வருணனைகள் :
ஒப்புமை கூறப்படும் போது உவமைகள் விரிந்து , படைப்பாளி தனது கற்பனையின் தன்மையை நீள் வருணனையாகக் பாடுவதால்
வருணனையை" தன்மை நவிற்சி எனும் அணியாகக் கொள்ளலாம் .
" கூறிடவே சேரனகர் குறிதென் கோடை "
( பாயிரம் பா . எ . 12 : அடி 1 )
என்று துவங்கும் பாடலில் " சேர நன்னாட்டைச் சேர்ந்ததும் , சிறப்பிடம் பெற்றதுமான கோட்டாறு எனும் பதியானது வன்கொடுமை
மிக்க புலியும் , பொறுமை , அமைதி பூண்ட பசுவும் ஒரு துறையில் ஒருங்கே வாழ்கின்ற அளவிற்கு அறநிலை தவறா நன்னிலமாகும் "
என்று வருணிக்கின்றார் .
11 . எண்ணுக்குறிப்பு :
மிகுதிப் பொருள் பற்றி குறிப்பிடுவதற்கு எண்களை ஒன்றிணைத்துக் காட்டுவதை எண்ணுக் குறிப்பு எனலாம் .
1 . " ரண்டுபத்து நான்கில் நடுவறிந்து மொன்றதனை "
( அம்மானை நூல் பா. எ . 70 : அடி 1 )
என்ற பாடல் வரியின் மூலம் இஸ்லாத்தின் ஒரிறைக்கொள்கையை உணர்த்தும் (கலிமா என்னும் மூல மொழியின் அரபுச்சொற்கள் 24
எண்களை ஞானியார் அப்பா அவர்கள் எண்ணுக்குறிப்பு அடிப்படையில் ( 2 *10 + 4 ) மிகையெண்ணால் உணர்த்துகின்றார் .
12 . அரபுச்சொல்லாட்சி :
இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களில் அரபுச்சொற்கள் மிகுந்து கையாளப்படுவது மரபு . இம்மரபிற்கிணங்க ஞான
அம்மானையில் இறசூல் , அறுசு , ஹல்லாஜ் (பெயர்ச்சொல் ) , முகியித்தீன் மலுக்கு ( பெயர்ச்சொல் ) , அஹது , உஹது போன்ற
அரபுச்சொற்கள் காணப்படுகின்றன .
13 . மொழி நடை :
ஞான அம்மானை எளிமையான நடையில் உள்ளார்ந்த மெய்ஞ்ஞானப் பொருளை விளக்குகின்றது . சிலேடை நயமும் , ஓசை நயமும் பொருந்தி காணப்படுகின்றது .
- இல்லம்
- நம்மைப்பற்றி
- வரலாற்றுக்குறிப்புகள்
- ஞான அம்மானை
- இலக்கிய உத்திகள்
- சாஹிபு பாடல்கள்
- புகைப்படங்கள்
- முகவரி
மர்ஹும் V.S.T. சம்சு தாஸீன் (நிறுவனர்)
மர்ஹும் V.S.T. செய்யது தாமீம்
ஹஸரத் ஞானியர் அப்பா தர்கா பள்ளியில் திருப்பாடல், பணிவிடை நடைபெறும் விசேஷ இரவுகள்
- பிரதி வியாழன் மாலை வெள்ளி இரவுகள்
- நிறை பிறை இரவு
- 14 ஆம் இரவு
- மகான்கள் நினைவு தினங்கள்