ஞானியார் அப்பா ஒலியுல்லாஹ் அறக்கட்டளை
ஹாமீம்
திருப்பாடல்கள்
ஹாமீம்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
ஞான அம்மானை.
பாயிரம்
காப்பு .
|
|
அறுசீர்க்கழில்நெடிலடி யாசிரியவிருத்தம். |
|
குருவினா லருள்மெய்ஞ் ஞானக் குறிப்பதை யடியே னுள்ளில் திருவினா லுரைக்க வென்றே திருமல ரலர்ந்த தேனில் மருவிய வுயிர்கட் கெல்லாம் வரமருள் வடிவ தான அருவரு ளிறசூ லுல்லா அடிமுடி காப்ப தாமே |
(1) |
கருவினி லமைத்த வாதி கருணையை யடியே னுன்னிக் குருமுடி யடியி னாமங் குறைவிலா தடியே னின்றன் மருவிய தொழிலில் ஞான வகைதனை யருளா லுன்னித் திருவருள் முறைமூன் றான ஜெம்மலைச் செப்பலாமே |
(2) |
கண்ணினுக் கடங்கான் மெய்யிற் கருத்தினாற் றெளிந்து பார்க்கில் விண்ணினுக் கடங்கா னந்த வெளிக்குளே யிருந்த கோனை முன்னிலைக் குருவி னாக முறையருள் மூன்றம் மானை எண்ணியுள் மனத்தாற் கூற விறைநபி காப்ப தாமே. |
(3) |
அறுசீர்ச் சந்தவிருத்தம் . மனதினொலி பெருகுகடல் மலைமகர மிவைமினிடி வவைககள் யாவும் கனமுனது மவுனமதில் கருணைதப்பா மலேயமைத்துக் காத்த கோனை இனமனதி லிருந் துறைந்தே யேகவஸ்தா யெறும்புகடை யெவ்வகைக்கு மான மனமுனைக்கண்டல்லாமல் வணங்கவே றிலைக்குருவின் வடிவ தாமே |
(4) |
கலிவிருத்தம் . முத்திரைப் பொருள் முடிவினில் முச்சுடராகி வத்துவா யொரு பொருளென வருந்திடுமானே சித்தியாயுன தருளினிற் சிறந்திடு மிறசூல் பத்தியாயரு கிருந்திடும் நால்வரைப் பணிவாம் . |
(5) |
ஆதிநாயகன் அறுஷினி லருள்கரம் நீட்டிப் பாதியாயமு தெடுத்தவ ரருந்திடும் பதத்தோர் சோதியாந்துணை மீன்றிடு மதலைக ளிருவர் போதமாமவர் மலர்ப்பதஞ் சிரசினிற் புனைவாம். |
(6) |
அறுசீர்த் தாழிசை . வரிசை யருளாற் பெரியோரும் மவுன வுவைஸூல் கற்னீபதம் பிரிய முடனே யருள்பெருகும் பெரியோ னருளா லுதித்திருந்த பரிசின் படியே குருவான பரஞ்சேர் ஹல்லா ஜவர்பதமும் உரிசை யுடனென் னுளமதனி லுகந்தே னமுதா யுண்டேனே. |
(7) |
மறுவொன் றணுகா திறையவன்றன் வரிசைஅறுஷிற் றுயின் றிருந்தோர் முறுவலான ஒலிகள் பொன்னின் முடிமே லிருக்கும் முதியோராம் அறுச மயமுங் கடந்துநின்றே யடங்கா திறைவன் றனைநாளும் குறுசி லிறையைத் தினம்பார்க்குங் குதுபுல் அஃலம் பதம்பணிவாம். |
(8) |
அவையடக்கம். அறுசீர்க்கழில்நெடிலடி யாசிரியவிருத்தம். வல்லகுரு கிருபையினா லம்மானை தனையடியேன் வழுத்தும் பாடல் எல்லவரு மிசைத்ததென்ன மாணிக்கக் கற்றனக்கு மிசையா யொப்புக் கல்லதனை வைத்ததுபோ லடியேனுட் கருணையினாற் கவல வென்று நல்லவரே யிதன்பிழையைத் தீர்த்தருள்வீ ரெந்நாளும் நவிலத் தானே. |
(9) |
தமிழறியே னுரையறியேன் பொருளறியேன் சிறியவனான் தரணி மீதிற் குமிழுறையு மமுதமதைக் குடித்திருந்து மெய்க்குருவின் குறியைப் பார்த்துச் சிமிழ்மலர்த்தே னமுதமுண்டு திரண்டுவரு மம்மானை சிறந்து கூறத் தமிழறிந்த பெரியோர்க ளிதன்பிழையைத் தீர்ப்பீர்தள் ளாமற் றானே . |
(10) |
மறித்திருந்த கலைநாலின் வழியுமதி னோடுநால் வகையுங் காலில் சுருட்டெழுந்து சுழித்திருந்த சுழியிதமு மதன்பொருளுந் தொந்த மாக அறுந்திருந்து வெளியில்வந்தே யமைந்ததுவு முனைநான்கி னருளுந் தூங்குங் குறித்திருந்த குறிப்புமதில் குறிக்கவரு ளம்மானை கூற லாமே . |
(11) |
ஆக்கியோர் . எண்சீர்க்கழில் நெடிலடி யாசிரியவிருத்தம் . கூறிடவே சேரனகர் குறிதென் கோடை கொடும்புலியும் பசுவுங்கூ டித்திடங்கொண் டோங்கும் ஆறிடையும் நாலிடையும் அருட்புராண வேதம் ஆய்ந்துபதி னெண்பாஷை யறிந்துணர்ந்த் வல்லோர் ஊறும்பல் கிதாபினுரை யுணர்வாக வுண்டோர் ஒலிசெய்கு உதுமாலெப்பை யாலீமருள் வரத்தால் தேறிவருஞ் செய்குமன்னான் றிருவருளில் உதித்த செய்குஅபூ பக்கர்திருப் பாலனுரை யாமே |
(12) |
அறுசீர்ச்சந்த விருத்தம் . உத்தம வேதபு ராணக லைக்கொரு வுற்பன மானதுரன் பத்திய ருள்குரு முத்திரை யானது பாய்ந்துறைக் கும்பயலாம் வத்துவை யுள்ளிலு கந்துகு டித்திடும் வல்லவ னம்மானை . சித்தியு ரைக்கமு கியித்தீன் மலுக்குமு தலியான் செப்புவனே . |
(13) |
செப்புவன் ஷெய்குமு கியித்தீன் மலுக்குமு தலியா னானபைதல் நற்புகழ் பெற்றிடும் நற்பெரி யோர்கள் நலத்துறு மம்மானை சொற்பிழை தீர்த்துளு கந்திடு வாரெனுந் தொந்தம தானகுரு கற்பனைச் சொற்படி கட்டளை யம்மானை கட்டுரை செய்வாமே. |
(14) |
நூல் கலித்தாழிசை எறும்புகடை யானைமுத லெல்லா வகையுமலர் உறும்புகழாம் நம்மிறசூ லொளிவுகா ணம்மானை உறும்புகழாம் நம்மிறசூ லொளிவுகா ணாமாகில் பிறைமதியு மவற்குவந்து பேணுமோ அம்மானை பேணியல்லோ வவரளவிற் பிறந்ததுகா ணம்மானை . |
(1) |
எல்லா மமைக்குமுத லேகனுகத் தாயிருந்து நல்லதிரு வாகவொன்றை நாடுவா னம்மானை நல்லதிரு வாகவொன்றை நாடுவா னாமாகில் எல்லை வெளியி லிருக்குமோ வம்மானை இருந்தல்லோ நம்மிறசூ லிசைந்தார்கா னம்மானை. |
(2) |
எண்ணெய்க் கறுப்பா யிருக்குமந்தக் கூரிருளில் மன்னன்முன்னே யொன்று வந்ததுகா ணம்மானை மன்னன்முன்னே யொன்று வந்ததுகா னாமாகில் உன்னுமவ னோடெதிர்த்து முரைக்குமோ வம்மானை உரைத்தல்லோ வெவ்வகையும் உண்டான தம்மானை |
(3) |
பச்சை சிவப்புப் பாய்ந்த வெளுப்போடு நிச்சயமா யிந்தவகை நினைவானா னம்மானை நிச்சயமா யிந்தவகை நினைவானா னாமாகில் வச்சிரமோ நம்மிறையோன் வன்னமோ வம்மானை வன்னமாய் நின்றலோபல் வகையமைத்தா னம்மானை . |
(4) |
ஆருமறி யாமலிறை யாவையுமே தானமைத்து ஊரு நினைவறியா தொழித்தான்கா ணம்மானை ஊரு நினைவறியா தொழித்தான்கா ணாமாகில் பேருமறி யாமலிறை புதைத்தானோ வம்மானை புதைத்தல்லோ காணப் பிறந்தார்கா ணம்மானை . |
(5) |
அண்டபிண்ட மலைகடலு மவனிமுழு துந்தேடி மண்டையுருண் டாலுமந்த வடிவறிவா ரம்மானை மண்டையுருண் டாலுமந்த வடிவறிவா ராமாகில் கண்டுதெரி சிக்கவிரு கண்ணுண்டோ வம்மானை கண்ணிருந்தல் லோவிறையின் காட்சிகண்டா ரம்மானை . |
(6) |
திடமுடைய குருவினடி சேர்ந்தே யிருந்தவன்றன் வடிவுதனை யின்னதென்று வகைகாணா ரம்மானை வடிவுதனை யின்னதென்று வகைகாண்பா ராமாகில் அடிமுடியும் நடுவடியு மறிபவரோ வம்மானை அறிந்தல்லோ வுட்கமலத் தருள்திறந்த தம்மானை . |
(7) |
நாட்டும் பொருளும் நடுவுஞ் சுழிமுனையுங் காட்டும்வகை யின்னதென்று காணார்கா ணம்மானை காட்டும்வகை யின்னதென்று காண்பாரே யாமாகில் கூட்டிமுடிக்கவொரு குறிப்புண்டோ வம்மானை குறிப்பல்லோ குருவினிலை கொண்டார்க்கா லம்மானை |
(8) |
தவனமா யண்டர்முனி சகலமனுப்பே யரக்கர் மவுனப் பொருளின் வகையறியா ரம்மானை மவுனப் பொருளின் வகையறிவா ராமாகில் உவண மலரடியி லூமையோ வம்மானை ஊமையலோ பேய்போ லொடுங்கினா லம்மானை . |
(9) |
கொல்லுகின்ற நஞ்சிற் கொடியதொரு நஞ்சதனை அல்லலறுத் துள்ளி லருந்தார்கா ணம்மானை அல்லலறுத் துள்ளி லருந்துவா ராமாகில் வல்லவமாய் நஞ்சு மயக்காதோ வம்மானை மயக்கியல்லோ மஸ்தாய் மகிழ்ந்திருந்தா ரம்மானை . |
(10) |
ஆகங் கலைவேத மறியாத மெய்ப்பொருளை சாகாமற் * செத்ததனைத் தாமறியா ரம்மானை சாகாமற் செத்ததனைத் தாமறிவா ராமாகில் வேகாமல் வெந்தவெளி விளங்குமோ வம்மானை விளங்கியல்லோ பொறியறுத்து மேலானா ரம்மானை . |
(11) |
மனக்கவலை மாற்றி வருந்துகுரு வின்னருளை உனைப்பதமென் றெண்ணி யுருகார்கா ணம்மானை உனைப்பதமென் றெண்ணி யுருகுவா ராமாகில் நினைத்துமடுப் பேற்றிவைக்க நெருப்புண்டோ வம்மானை நெருப்பல்லோ கொடுமுடியை நீறாக்கு மம்மானை . |
(12) |
மாயா சொரூப மயக்கத்தைத் தானறுத்துக் காயாமற் காய்ந்திறையைக் கண்டறியா ரம்மானை காயாமற் காய்ந்திறையைக் கண்டறிவா ராமாகில் மாயாமல் மாய்ந்து மறக்குமோ வம்மானை மறந்தல்லோ குருவினருள் வடிவுகண்டா ரம்மானை . |
(13) |
வெள்ளெழுத்தை மாற்றி விழிலெழுத்தைத் தானறுத்தே உள்ளெழுத்தைப் பார்த்தே யுணரார்கா ணம்மானை உள்ளெழுத்தைப் பார்த்தே யுணருவா ராமாகில் வள்ளல்தனைக் கண்டு மகிழ்வாரோ வம்மானை மகிழ்ந்தல்லோ வின்பதுன்ப மற்றுநின்றா ரம்மானை . |
(14) |
சாத்திரமும் வேதமுறை தானறியா மெய்ப்பொருளைப் பார்த்திருந்து தூங்கப் பரிசறியா ரம்மானை பார்த்திருந்து தூங்கப் பரிசறிவா ராமாகிற் காத்திருந்து பொருளினடி காண்பரோ வம்மானை கண்டல்லோ ஞானமிரு கண்ணான தம்மானை . |
(15) |
* செத்திருந்து என்றூஉம் பாடம். அன்பரெல்லாம் போற்றுமெங்க ளாதியிற சூல்நயினார் இன்ப வலம்புரிக்குள் ளிருந்தார்கா ணம்மானை இன்ப வலம்புரிக்குள் ளிருந்தார்கா ணாமாகில் முன்பினிறை மீன்றுவந்த முத்தாமோ வம்மானை முத்தல்லோ நம்மிறசூல் மொழிந்தார்கா ணம்மானை |
(16) |
நாலு மறைவேதம் நவிலுமிற சூல்நயினார் கால்தலையை யின்னதென்று கண்டறியா ரம்மானை கால்தலையை யின்னதென்று கண்டறிவா ராமாகில் வாலைவய தாயிருந்து வாழ்வாரோ வம்மானை வாழ்ந்தல்லோ காயமதில் வடுவிலைகா ணம்மானை. |
(17) |
முத்தி லுதித்த முஹம்மதுர்ற சூல்நயினார் பெற்றுப் பொருளுகந்த பெரியவர்கா ணம்மானை பெற்றுப் பொருளுகந்த பெரியவர்கா ணாமாகில் உத்தமமாய் நீளம்வெகு வுயரமோ வம்மானை உயரமல்லோ அறுஷைச்சிரங் கடந்துகந்தா ரம்மானை . |
(18) |
அஹதுமுத லானபடைப் படங்கலுக்கும் நம்மிறசூல் வுஹதுமுத லாயிருந்த வுண்மைகா ணம்மானை வுஹதுமுத லாயிருந்த வுண்மைகா ணாமாகில் வஸ்துவகை யெவ்வுயிர்க்குள் வாழ்வாரோ வம்மானை வாழ்ந்தல்லோ வுதித்தொடுங்கி வந்ததுகா ணம்மானை |
(19) |
அச்ச மறுத்தே யரியதிருக் கண்மூடி உட்சிவத்தைக் கண்டே யுகக்கறியா ரம்மானை உட்சிவத்தைக் கண்டே யுகக்கறிவா ராமாகில் வைச்சிருந்து கொள்ள மதியுண்டோ வம்மானை மதியிருந்தல் லோவுளத்தில் வைத்தார்கா ணம்மானை . |
(20) |
காலறியார் மாலறியார் கையறியார் மெய்யறியார் கோலெடுத்தே யாட்டுங் குறிப்பறியா ரம்மானை கோலெடுத்தே யாட்டுங் குறிப்பறிவா ராமாகில் காலன் றனைவெருட்டக் கட்டுண்டோ வம்மானை கட்டிருந்தல் லோகாலன் தனைக்கடந்தா ரம்மானை. |
(21) |
மின்னொளிவ தாயிருந்த மெய்யிற சூல்நயினார் கண்ணொளிவ தாய்ப்பார்க்குங் கண்ணாடி யம்மானை கண்ணொளிவ தாய்ப்பார்க்குங் கண்ணாடி யாமாகில் முன்னிறைய வுள்ளில் முகமுண்டோ வம்மானை முகமல்லோ வமைத்ததெல்லா முழித்துப்பா ரம்மானை . |
(22) |
வாசமுற்று நின்ற முஹம்மதுர்ற சூல்நயினார் வேசமயி லாயிருந்த மெய்யர்கா ணம்மானை வேசமயி லாயிருந்த மெய்யரே யாமாகில் ஆசைச் சிறகைவிரித் தாடுமோ வம்மானை ஆட்டமல்லோ வெவ்வகையு மாடுதுபா ரம்மானை |
(23) |
தந்தையுட னன்னைசுற்றஞ் சகலமுமே தானறிந்து வந்தவகை கண்டு மறவார்கா ணம்மானை வந்தவகை கண்டு மறவாரே யாமாகில் சிந்தை மயங்கித் தெளியுமோ வம்மானை தெளிந்தல்லோ பின்வாங்கிச் சென்றார்கா ணம்மானை . |
(24) |
உற்ற வுருவாகி யுறைந்திருந்த காயமதில் ஒத்துக்குசை பூட்டிப்பரி யோடுதுபா ரம்மானை ஒத்துக்குசை பூட்டிப்பரி யோடுதுபா ராமாகில் மெத்த நடக்கவெகு காலுண்டோ வம்மானை காலல்லோ பன்னிருகால் காட்டுங்கா ணம்மானை |
(25) |
வெற்றுப் பரியாய் விரையநடக் கும்பரிமேல் சித்தறிந்தே யேறித் திருப்பறியா ரம்மானை சித்தறிந்தே யேறித் திருப்பவறி வாராகில் பத்திருந்து கீழே பணியுமோ வம்மானை பணிந்தல்லோ காலாற் பரிவுகொண்டா ரம்மானை . |
(26) |
நாலா றெழுத்தில் நாதனொன்றை நாடிவருங் காலாற் பிடித்திருத்திக் கண்டறியா ரம்மானை காலாற் பிடித்திருத்திக் கண்டறிவா ராமாகில் நாலாம் பதத்தினையே நாடுவரோ வம்மானை நாடியல்லோ வடிமுடிக்கும் நடுவானா ரம்மானை . |
(27) |
சித்திருக்கு மூலத் திருக்குகையி லாடிநின்ற முத்திருக்குங் கண்ணை முழிக்கறியா ரம்மானை முத்திருக்குங் கண்ணை முழிக்கறிவா ராமாகில் பத்திருந்து மேல்வீட்டிற் பார்க்குமோ வம்மானை பார்த்தல்லோ வுள்ளிலொளி பரிந்ததுகா ணம்மானை |
(28) |
தாளிட்டுப் பூட்டித் தான்மறைந்த வீடதனைக் கோள்விட் டகந்திறக்கக் குறிப்பறியா ரம்மானை கோள்விட் டகந்திறக்கக் குறிப்பறிவா ராமாகில் தேள்விட் டொடுங்கியருள் தெளிவாரோ வம்மானை தெளிந்தல்லோ காயஞ் சிறந்ததுகா ணம்மானை |
(29) |
காலில்லா தோடிக் கரமில்லா தேயெடுத்துக் கோலில்லா தூன்றுங் குறிப்பறியா ரம்மானை கோலில்லா தூன்றுங் குறிப்பறிவா ராமாகிற் காலில்லா தோடிக் கடப்பரோ வம்மானை கடந்தல்லோ மெய்ப்பொருளைக் கண்டுகொண்டா ரம்மானை |
(30) |
அறிவுக் கடங்கா தரிய பெரும்பொருளைப் பரிவறிந்து கொள்ளார் பசாசர்கா ணம்மானை பரிவறிந்து கொள்ளார் பசாசரே யாமாகில் வெறியெழுந்து பவக்கடலில் வீழ்வாரோ வம்மானை வீழ்ந்தல்லோ வீணாய் விரைந்தார்கா ணம்மானை |
(31) |
அத்த னிருந்த வருமைதனை யேயறிந்து பெற்றிருந்து கொண்டு பிழையார்கா ணம்மானை பெற்றிருந்து கொண்டு பிழைப்பாரே யாமாகில் முத்தியில்லா மாண்பரொடு மொழிவரோ வம்மானை மொழியும் வகையறிந்து மொழியுங்கா ணம்மானை . |
(32) |
நாத முறைந்திடமும் நந்தியிருந் தத்தலமும் பாதமிருந் தாடிடமும் பரிவறியா ரம்மானை பாதமிருந் தாடிடமும் பரிவறிவா ராமாகில் கோதறா மாண்பரொடு கூட்டுவரோ வம்மானை கூட்டும் வகையறிந்து கூட்டுங்கா ணம்மானை . |
(33) |
பாட்டும் படிப்பும் பலநூல் களுமறிந்து கூட்டுங் குருவினடி குறியார்கா ணம்மானை கூட்டுங் குருவினடி குறிப்பாரே யாமாகில் நாட்டும் வகையறிந்து நாடுவரோ வம்மானை நாடியல்லோ மெய்ப்பொருளை நவின்றார்கா ணம்மானை . |
(34) |
அளவுக் கடங்கா தருமைப் பொருளறிந்தோர் எளிதுதரு முள்ள மெழுகடல்கா ணம்மானை எளிதுதரு முள்ள மெழுகடலே யாமாகில் தெளிவுதருங் கடலுக்குயர் திரையுண்டோ வம்மானை திரையல்லோ திருவருளைத் திறந்துரைத்தா ரம்மானை . |
(35) |
உற்றிருந்து காலா லுதைக்குஞ் சுழிமுனையில் முத்திருந்த பாத முறையறியா ரம்மானை முத்திருந்த பாத முறையறிவா ராமாகில் மத்தறிவைக் கொள்ளாத மாடாமோ வம்மானை மாடல்லோ மெய்ப்பொருளின் வகையறியா ரம்மானை . |
(36) |
ஆயும் பொருளி லமர்ந்தடங்கி நின்றதனைக் காயும் வகையறிந்து காணார்கா ணம்மானை காயும் வகையறிந்து காண்பாரே யாமாகிற் பாயுமிரு காலால் பரியுமோ வம்மானை பரியுமோ வடங்கிநின்ற பரமறிந்தா லம்மானை |
(37) |
செடியார் வனத்தினில்வாழ் சேர்ந்தமா னுங்கலையும் குடியறிந்தி ணங்குசுகக் குறிப்பறியா ரம்மானை குடியறிந்தி ணங்குசுகக் குறிப்பறிவா ராமாகில் மடுவிறங்கி மதலைபெற்று வாழாதோ வம்மானை வாழ்ந்தல்லோ மூன்றுமொன்றாய் மகிழ்ந்ததுகா ணம்மானை . |
(38) |
ஆடுந் திருவணையி லாடுங்கா லொன்றாகி நாடு மிடவலமும் நடம்புரிந்தா னம்மானை நாடு மிடவலமும் நடம்புரிந்தா னாமாகில் கூடி யடிக்கவொரு கொட்டுண்டோ வம்மானை கொட்டல்லோ வோசைக் குருவாகு மம்மானை . |
(39) |
நடுவி லுறைந்திருந்து நாற்கலைக்கு மெட்டாதான் திடமுடைய மங்கையுடன் சேர்ந்தான்கா ணம்மானை திடமுடைய மங்கையுடன் சேர்ந்தான்கா ணாமாகில் அடவுடனே நம்மிறையோ னாளுருவோ வம்மானை ஆளுருவோ மாயமா யிருந்தான்கா ணம்மானை . |
(40) |
தாக்கும்வடி வில்லாத சங்கையில்லா ரூபமதைப் பார்க்கும் படிபார்த்தாற் பரியுருவா மம்மானை பார்க்கும் படிபார்த்தாற் பரியுருவா மாமாகில் கோர்க்கப் புழுப்பொதிந்த குளவியோ வம்மானை குளவியல்லோ வறிந்தவிடங் கொண்டாக்கா லம்மானை . |
(41) |
அந்தரத்தி லண்டமிட்டே யந்தரத்திற் குஞ்சுபொரித் தந்தரத்தி லேபறந்தே யாடுதுகா ணம்மானை அந்தரத்தி லேபறந்தே யாடுதுகா ணாமாகில் வந்து மருவமண வாளனுண்டோ வம்மானை மணவாள னாகவல்லோ குஞ்சுவந்த தம்மானை |
(42) |
கையுமிலை காலுமிலை கண்ணுமிலை மூக்குமிலை மெய்யுமிலை யொன்று விளங்குங்கா ணம்மானை மெய்யுமிலை யொன்று விளங்குங்கா ணாமாகில் மையிருளில் வந்துதித்த மாயமோ வம்மானை மாயமல்லோ வுருப்படுத்தி வைத்தாக்கா லம்மானை . |
(43) |
உச்சி நடுவே யொளித்தொருவ னோடிவந்த கச்சைச் சிலம்பொலியைக் காணார்கா ணம்மானை கச்சைச் சிலம்பொலியைக் காண்பாரே யாமாகில் மிச்சப்பொருள்பார்க்க விழியுண்டோ வம்மானை விழியல்லோ கண்டு விளங்கினா ரம்மானை |
(44) |
வளம்பெற் றுளத்தில் மகிழ்ந்திருந்து மறைந்தொளித்த பழம்போற் பழம்பொருளைப் பழக்கறியா ரம்மானை பழம்போற் பழம்பொருளைப் பழக்கறிவா ராமாகில் உளம்போற் றுடையா துரைக்குமோ வம்மானை உரைத்தல்லோ வழிவில்லா துறைந்திருந்தா ரம்மானை |
(45) |
எட்டெழுத்தைக் கண்ணாக்கி ரண்டெழுத்தி னூடுசுற்ற வட்டெழுத்தைக் கண்டு மகிழார்கா ணம்மானை வட்டெழுத்தைக் கண்டு மகிழுவா ராமாகில் பட்டமரமும் பழுக்குமோ வம்மானை பழுத்தல்லோ வுண்டு பசியறுத்தா ரம்மானை |
(46) |
வட்ட மதியழைத்த வள்ளலிற சூல்நயினார் அட்டமுள்ள மேனியா காசங்கா ணம்மானை அட்டமுள்ள மேனியா காசங்கா ணாமாகில் வட்டமதி முத்துநகை வடுப்படுமோ வம்மானை வடுவல்லோ * வோடி மறைந்தாக்கா லம்மானை . |
(47) |
இருந்த விருபேரு மிசைந்தசுகத் தாலுருகிப் பரிந்து திருகியொன்று பற்றுங்கா ணம்மானை பரிந்து திருகியொன்று பற்றுங்கா ணாமாகில் விரைந்து வெளியில்வந்து விள்ளாதோ வம்மானை விண்டல்லோ வைவருமே விளங்கினா ரம்மானை . |
(48) |
காடுஞ் செடியுங் கடந்த வனமதனை வாடி யறுத்துவெட்டி வருந்தார்கா ணம்மானை வாடி யறுத்துவெட்டி வருந்துவா ராமாகில் கூடிக் கலந்திருந்துக் கொள்ளாதோ வம்மானை கொள்ளாதோ விருவரையுங் குறித்தக்கா லம்மானை . |
(49) |
மூல மறுநான்கின் முடிவுதனைக் கண்டிருந்தும் நீலவிழிக் கண்மூடி நினையார்கா ணம்மானை நீலவிழிக் கண்மூடி நினைப்பாரே யாமாகில் பாலும் பசுவும்வந்து பாயாதோ வம்மானை பாய்ந்தல்லோ வுண்டு பரிந்திருந்தா ரம்மானை . |
(50) |
* ஆடி என்றூஉம் பாடம் . விம்மிக் கதறும் விரைவுதனை விட்டொழிந்து நம்மறிவில் நின்றதனை நாடார்கா ணம்மானை நம்மறிவில் நின்றதனை நாடுவா ராமாகில் தம்மிற பிணக்கறுத்துத் தரியாதோ வம்மானை தரித்தல்லோ காயந் தனைக்கண்டா ரம்மானை , |
(51) |
கள்ளச் சினமறுத்துங் கசடுதனை யேயோழித்தும் உள்ளச்சங் கொண்டே யுகந்திரா ரம்மானை உள்ளச்சங் கொண்டே யுகந்திருப்பா ராமாகில் வெள்ளை சிவப்போடு மேவாரோ வம்மானை மேவியல்லோ வுள்ளம் விளங்கினா ரம்மானை , |
(52) |
மூலத்தின் மேற்றோன்றும் முடிச்சதனைத் தானவிழ்த்து மேலைத்தூண் பார்த்து விளங்கார்கா ணம்மானை மேலைத்தூண் பார்த்து விளங்குவா ராமாகில் காலத்தூண் டன்னைக் கடப்பாரோ வம்மானை கடந்தல்லோ மேவிக் கலந்திருந்தா ரம்மானை . |
(53) |
முந்தவொளி வாயிருந்த முஹம்மதுர்ற சூல்நயினார் பிந்த வுலகிற் பிறந்தார்கா ணம்மானை பிந்த வுலகிற் பிறந்தார்கா ணாமாகில் அந்த வடிவு மடங்காதோ வம்மானை அடங்குமோ நம்மிறையோன் ஆஷிக்கானா லம்மானை . |
(54) |
எக்கீன் மரத்தி லிருந்த நபியிறசூல் முக்கீம்நபி கட்கெல்லாம் முன்னான ரம்மானை முக்கீம்நபி கட்கெல்லாம் முன்னான ராமாகில் சிக்காத வர்க்குச்செங் கோலுண்டோ வம்மானை கோலல்லோ நம்மிறையோன் குதறத்துகா ணம்மானை . |
(55) |
ஐய மறுத்தே யருளதனைத் தான்பார்த்துக் கையெடுத்துக் கால்பிடிக்கக் கண்டறியா ரம்மானை கையெடுத்துக் கால்பிடிக்கக் கண்டறிவா ராமாகில் மெய்யகத்தி லுண்மை விளங்காதோ வம்மானை விளங்காதோ கால்பிடிக்க விரைவறிந்தா லம்மானை . |
(56) |
குத்தி யிருந்து குறித்து நடுவறிந்து பத்தி தனிலூன்றும் பரிவறியா ரம்மானை பத்தி தனிலூன்றும் பரிவறியா ராமாகில் முத்திரைக்குட் கண்ணும் முழியாதோ வம்மானை முழித்தல்லோ வாடும் முடிவுகண்டா ரம்மானை . |
(57) |
மன்னை யொழித்து வருங்கலையைத் தான்மறித்து தன்னை மறந்திருந்து சாரார்கா ணம்மானை தன்னை மறந்திருந்து சாருவா ராமாகில் முன்னும் பின்னுந்தேடி முழிப்பாரோ வம்மானை முழிப்பாரோ வந்த முடிவுகண்டா லம்மானை . |
(58) |
பனித்துளிபோற் பாய்ந்து பாரவுரு வாய்மனுவாய்த் துனித்து வெளியில்வந்து தோன்றுங்கா ணம்மானை துனித்து வெளியில்வந்து தோன்றுங்கா ணாமாகில் அனைத்துமுரு வாகிநின்றே யாடுமோ வம்மானை ஆடாதோ சூட்சுமம்விட் டாட்டினா லம்மானை . |
(59) |
குத்தை யொருநாக்கால் குறித்துவிழி நேர்பார்த்து செத்திருந்தே யோரெழுத்திற் சேரார்கா ணம்மானை செத்திருந்தே யோரெழுத்திற் சேருவா ராமாகில் நற்றவத்தைக் கண்டு நாடாதோ வம்மானை நாடியல்லோ நற்பதியை நம்பினா ரம்மானை . |
(60) |
ஊமை யிருந்தவிடத் துண்மைதனைக் காணாமல் ஆண்மைதனைப் பேசி யலைந்தார்கா ணம்மானை ஆண்மைதனைப் பேசி யலைந்தார்கா ணாமாகில் பான்மையில்லாப் பொல்லாத பாதகரோ வம்மானை பாதகரல் லோவாண்மை பதுக்கறியா ரம்மானை . |
(61) |
அக்கரந்த வக்கரத்து ளாடிநின்ற வட்சரத்தை உட்கரந்த வக்கரத்து ளுருக்கறியா ரம்மானை உட்கரந்த வக்கரத்து ளுருக்கறிவா ராமாகில் சக்கரத்துட் கொண்டவனல் தாவுமோ வம்மானை தாவியல்லோ வெட்கலந்து தவமானா ரம்மானை . |
(62) |
ஆவென் றெழுந்தே யலறுங் கடலதனில் ஹீயென் றிரைந்த கிருபைகா ணம்மானை ஹீயென் றிரைந்த கிருபைகா ணாமாகில் ஹுவென் றவர்க்குக் கொடுக்குமோ வம்மானை கொடுத்தல்லோ வக்கிருபை கொண்டார்கா ணம்மானை . |
(63) |
பார்வைகொடி ரண்டுமொன்றாய்ப் பரிந்துமரு வும்வேளை வேர்வை யலர்ந்துவிழும் வெம்பனிகா ணம்மானை வேர்வை யலர்ந்துவிழும் வெம்பனிகா ணாமாகில் கோர்வையதில் வந்து குறிக்குமோ வம்மானை குறித்தல்லோ நந்தி குறியுருவா மம்மானை . |
(64) |
நாலுமுக மாயிருந்த நந்திமுகத் தின்னடுவே கோலமா யொன்று குறிக்குங்கா ணம்மானை கோலமா யொன்று குறிக்குங்கா ணாமாகில் சீலவடிவு சிறக்குமோ வம்மானை சிறந்தல்லோ றூஹாய்த் திரண்டதுகா ணம்மானை . |
(65) |
பேயு மலிபும் விரைந்துதிரண் டேமருவி மாயமாய் வெம்பனிக்குள் வடிவாகு மம்மானை மாயமாய் வெம்பனிக்குள் வடிவாகு மாமாகில் ஓயாமற் சென்றே யுருப்படுமோ வம்மானை உருவல்லோ சீனுடனூன் உறைந்தக்கா லம்மானை . |
(66) |
உச்சி பழுத்தே யொழுகுந்தே னூடெழுந்து மெய்ச்சிவமா யொன்று விளையுங்கா ணம்மானை மெய்ச்சிவமா யொன்று விளையுங்கா ணாமாகில் செச்சையருள் காண்சென்னி தெரியுமோ வம்மானை தெரியுங்கா ணாவி திறமாகி லம்மானை . |
(67) |
ஊன்றி யிழுத்தே யுருப்பட்டுறை வாகுமதில் தாண்டிநடு வாகவொன்று தானிறைந்த தம்மானை தாண்டிநடு வாகவொன்று தானிறைந்த தாமாகில் ஊன்று மதற்கு முயிருண்டோ வம்மானை உயிரல்லோ குத்தி யுறைந்திருந்த தம்மானை |
(68) |
விண்ணைக்கா லூட்டி விரைந்தெழுந்த வக்கினியால் கண்ணிரண்டு மூடிக் கருதார்கா ணம்மானை கண்ணிரண்டு மூடிக் கருதுவா ராமாகில் முன்னுளதெல் லாமவர்க்கு முத்தாமோ வம்மானை முத்தல்லோ தீயால் முடிந்தாக்கா லம்மானை . |
(69) |
ரண்டுபத்து நான்கில் நடுவறிந்து மொன்றதனைக் கொண்டிருந்து வாசி குறிக்கறியா ரம்மானை கொண்டிருந்து வாசி குறிக்கவறி வாராகில் மன்றுளா டும்பொருளின் வகையாமோ வம்மானை வகையல்லோ வுள்ளில் மருவினா ரம்மானை . |
(70) |
முன்னான்கு காலால் முதிர்ந்தெழுந்த வாசிதனை முன்னான்கி லொன்றாய் முடுக்கறியா ரம்மானை முன்னான்கி லொன்றாய் முடுக்கறிவா ராமாகில் நண்ணாம் பயக்கூனில் நல்குமோ வம்மானை நல்கியல்லோ மேலே நடந்தார்கா ணம்மானை . |
(71) |
கோழிமுட்டை போலுருண்டு கொண்டிருந்த மூலமதில் தாளிரண்டா லேநடக்கத் தடமறியா ரம்மானை தாளிரண்டா லேநடக்கத் தடமறிவா ராமாகில் ஊழிரண்டு காலா லுதைக்குமோ வம்மானை உதைத்தல்லோ காய முருப்படுங்கா ணம்மானை . |
(72) |
உச்சி யறிந்தே யுட்பூட்டுத் தானறிந்து குச்சியால் தாள்திறந்துக் கொள்ளறியா ரம்மானை குச்சியால் தாள்திறந்துக் கொள்ளறிவா ராமாகில் நச்சியமு துண்டுபொருள் நாடுமோ வம்மானை நாடியல்லோ வுண்டொடுங்கி நன்றானா ரம்மானை . |
(73) |
மத்தாகி நின்று வளர்ந்துமுரு வாயெழுந்து கொத்தான வுண்மை குறிக்கறியா ரம்மானை கொத்தான வுண்மை குறிக்கவறி வாராகில் முத்தான சோதி முளைக்குமோ வம்மானை முளைத்தல்லோ கனிந்தரச முண்டார்கா ணம்மானை . |
(74) |
உள்ளக் குவளறைக்குள் ளுருண்டெழுந்த நாதவிந்தில் கள்ளத்தொழி லாகவொன்று கலந்ததுகா ணம்மானை கள்ளத்தொழி லாகவொன்று கலந்ததுகா ணாமாகில் துள்ளித் தெறித்த சுடராமோ வம்மானை சுடரல்லோ வஞ்சுமொன்றாய்த் தோன்றினதா மம்மானை . |
(75) |
ஆக திருப்பாடல் - 89
- இல்லம்
- நம்மைப்பற்றி
- வரலாற்றுக்குறிப்புகள்
- ஞான அம்மானை
- இலக்கிய உத்திகள்
- சாஹிபு பாடல்கள்
- புகைப்படங்கள்
- முகவரி
மர்ஹும் V.S.T. சம்சு தாஸீன் (நிறுவனர்)
மர்ஹும் V.S.T. செய்யது தாமீம்
ஹஸரத் ஞானியர் அப்பா தர்கா பள்ளியில் திருப்பாடல், பணிவிடை நடைபெறும் விசேஷ இரவுகள்
- பிரதி வியாழன் மாலை வெள்ளி இரவுகள்
- நிறை பிறை இரவு
- 14 ஆம் இரவு
- மகான்கள் நினைவு தினங்கள்