ஹாமீம்
உத்தேசக் கருத்துரைகள்
பாயிரம் ( காப்பு ) :
இப்பகுதியில் அமைந்துள்ள பாடல்களில் ஞானியர் அப்பா அவர்கள் தமது குருவினால் தமக்கு அருளப்பட்ட மெய்ஞ்ஞானத்தின்
உட்பொருளை மாந்தர் பயன் பெறும் வண்ணம் சிறப்புடனே விரித்துரைப்பதன் பொருட்டு பரம் பொருளாம் இறைவன், அவனது
திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) , கலிபாக்கள் நால்வர் , நபிகளாரின் திருமகள் பாத்திமா நாயகி , அவரது புதல்வர்கள் ஹசன் ,
ஹுஸைன் , நபிகளாரின் நேசர் உவைசுல் கற்னீ , தமது குருமகான் மன்சூர் ஹல்லாஜ் , மெய் நிலை கண்ட ஞானி முகைதீன்
ஆண்டகை ஆகியோரைப் போற்றித் துதித்து அன்னோரது நல்லருளை வேண்டுகின்றார் .
அவையடக்கம் :
இப்பகுதியில் அமைந்துள்ள பாடல்களில் தமது குருபிரான் தமக்குச் சுட்டிக் காட்டிய குறிப்புரையைக் கொண்டு , ஞானமெனும்
மணம் கமழும் நறுஞ் சாற்றினை உண்டவராய் இந்த அம்மானையைத் தாம் பாடுவதாக குறிப்பிடுவதோடு தமிழில் துறை போகிய
சான்றோர்கள் இப்பாடலைப் புறந்தள்ளிவிடாது இதன் கண் நேர்ந்த குற்றங்களை களைவார்களாக ! என்றும் வேண்டுகின்றார் .
மேலும் , ஞான யோக சாதனங்களில் ஒன்றான வாசி யோகப் பயிற்சியைப் பற்றிய குறிப்புகளையும் கூற முன்வருவதாக
பாடுகின்றார் .
ஆக்கியோர் :
இப்பகுதியில் அமைந்துள்ள பாடல்களில் தாம் பிறந்த ஊராகிய கோட்டாறு , அற நிலை தவறா நன்னிலம் என்றும் ,
அவ்வூரில் வாழ்ந்திருந்தோராகிய வேத புராணங்களை அறிந்துணர்ந்த சான்றோர்களது வழித்தோன்றல் தாம் எனவும் குறிப்பிடுகின்றார் .
மேலும் , நற்புகழ் கொண்ட தகை சான்ற பெரியோர்கள் இவ்வம்மானையின் சொற்குற்றங்களைக் களைந்து , மகிழ்வுடன்
ஏற்றுக்கொள்வார்களாக ! என்றும் வேண்டுகின்றார் .
நூற்செய்திகள் :
ஞானியார் அப்பா அவர்களின் ஞான அம்மானை பிரதான நூலில் எழுபத்தைந்து ( 75 ) பாடல்கள் உள்ளன .
ஞானியார் அப்பா அவர்கள் இந்தப் பாடல்களில் புள்ளி , இருள் , ஒளி , புகழ் , முத்து , அட்சரம் , குரு , ஐம்புலனடக்கம் , தியானம் ,
வாசி யோகம் ( பிராணாயாமம் ), காலனைக் கடத்தல் , மூலமறு நான்கு , நாதம் , சுழுமுனை ( நடுவிடம் ), மூலாதாரம் , அமுதம் ,
அழிவில்லா நிலை முதலான விஷயங்களைக் குறித்துப் பாடுகின்றார் .
புள்ளி :
படைப்புத் தொழில் நிகழ்வதற்கு முன்னால் இறைவனது இருப்பை புள்ளி ( நுக்தா ) என்ற பரிபாஷையால் ஞானியர் குறிப்பர் .
" எல்லா மமைக்குமுத லேகனுகத் தாயிருந்து
நல்லதிரு வாகவொன்றை நாடுவா னம்மானை "
என அமைந்த 2 - ம் பாடலில் இறைவனது இருப்பை ( புள்ளி ) குறிப்பிடுகின்றார் .
இருள் :
இறைவன் படைப்புகளைப் படைப்பதற்கு முன்னிருந்த நிலையை " இருள் " ( அமா ) என்று கூறுவர் .
"இறைவன் அமா வில் இருந்தான் . படைப்புகளைப் படைக்க நாடிய போது முதன்முதலாக எனது ஒளியைப் படைத்தான் . எனது ஒளியில் நின்றும் ஏனைய படைப்படங்களையும் இறைவன் படைத்தான் "
என்பதாக பெருமானார் ( ஸல் ) அருளியுள்ளனர் .
" எண்ணெய்க் கறுப்பா யிருக்குமந்தக் கூரிருளில் "
என்று துவங்கும் 3 - ம் பாடலில் இந்த இருளைப் பற்றி உவமை தோன்றப் பாடுகின்றார் .
ஒளி :
முன்னர் கூறப்பட்ட பெருமானாரின் பேரொளியைப் பற்றியே ஞானியர் அப்பா அவர்கள் முதற்பாடலின் முதல் இரண்டடிகளில்
குறிப்பிடுகின்றார் .
மேலும் ,
" முந்தவொளி வாயிருந்த முஹம்மதுர்ற சூல்நயினார் "
என 54 - ம் பாடலிலும் ,
" மின்னொளிவ தாயிருந்த மெய்யிற சூல்நயினார் "
என 22 - ம் பாடலிலும் ஒளி பற்றிய இச் செய்தியினைக் குறிப்படுகின்றார் .
புகழ் :
பெருமானாரின் பேரொளி இறைவனைப் புகழ்ந்ததை
" மன்னன்முன்னே யொன்று வந்ததுகா ணாமாகில்
உன்னுமவ னொடெதிர்த்து முரைக்குமோ வம்மானை "
என்பதாக 3 - ம் பாடலிலே குறிப்பிடுகின்றார் .
மேலும் " முஹம்மது " என்ற சொல்லிற்கே ( இறைவனைப் ) புகழ்பவர் என்பது தான் பொருளாகும் என்பது குறிப்பிடத் தக்கது .
முத்து :
முஹம்மது ( ஸல் ) அவர்களைக் குறித்திடும் விதமாக முத்து என்ற பரிபாஷையை ஞானியர் பயன்படுத்துவது மரபு ஆகும் .
இதனடிப்படையில்
" முன்பினிறை யீன்று வந்த முத்தாமோ வம்மானை "
என்று 16 - ம் பாடலிலும்
" முத்தி லுதித்த முஹம்மதுர்ற சூல்நயினார் "
என்றும் 18 - ம் பாடலிலும் பாடுகின்றார்.
"முந்தக்கிருபை பெருகி முத்தான முஹம்மதை நீ "
என்ற தற்கலை பீர் முஹம்மது அப்பா அவர்களது ஞானப் புகழ்ச்சி வரிகள் ஒப்பு நோக்கத் தக்கன.
அட்சரம் :
அட்சரங்களை இறைவனை குறித்திடுவதற்கான குறியீடுகளாக பயன்படுத்துவது மரபு ஆகும் .
இதனை ஒட்டியே 4 ம் - பாடலில்
" வச்சிரமோ நம்மிறையோன் வன்னமோ வம்மானை
வன்னமாய் நின்றலோபல் வகையமைத்தா னம்மானை "
என்று பாடுகின்றார் .
இந்த இடத்திலே அட்சரம் என்பது இறைவனைக் குறிப்பிடுவதற்காக பயன்படுத்தப்படும் அரபு மொழி அகர வரிசையின்
முதலெழுத்தாகிய " அலிஃப் " என்பதைக் குறிக்கும் .
குரு :
குரு என்பவர் மெய்ஞ்ஞானம் வழங்குபவர் ஆவார் .
" பாட்டும் படிப்பும் பலநூல் களுமறிந்து
கூட்டுங் குருவினடி குறியார்கா ணம்மானை "
என்ற 34 - வது பாடலில், கலை பலவும் கற்றுத் தேர்ந்தவரேயாயினும்
இறைவனோடு தம்மைக் கூட்டுவிக்கும் திறம் கொண்ட மெய்க்குருவை
மாந்தர் பலர் தேடிப் பெற்றுக்கொள்ளமாட்டார்கள் என்ற கருத்தமைத்து பாடுகின்றார் .
ஐம்புலனடக்கம் :
யோக நேறி பயிற்சிகளில் ஐம்புலனடக்கமும் ஒன்றாகும் .
"ஆகங் கலைவேத மறியாத மெய்ப்பொருளை
சாகாமற் செத்ததனைத் தாமறியா ரம்மானை
சாகாமற் செத்ததனைத் தாமறிவா ராமாகில்
வேகாமல் வெந்தவெளி விளங்குமோ வம்மானை
விளங்கியல்லோ பொறியறுத்து மேலானா ரம்மானை "
என்பது 11 - ம் பாடலாகும் .
" சாகாக்கால் " என்பது வாசியாகிய வாயு ; " வேகாத்தலை " என்பது ஆகாய வெளி , பொறியறுத்து என்பதன் மூலம்
ஐம்புலன்களையும் வென்ற மேண்மையைக் குறிப்பிடுகின்றார் .
கீழ்க்காணும் குறட்பா இதனோடு ஒப்பு நோக்கத் தக்கது .
" உரனென்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து "
தியானம் :
தியானம் என்பது ஆன்மீக நெறிமுறையில் அதிதீவிரமானதொரு நிலையாகும் . தியான நிலைக்கான பயிற்சியும் , முயற்சியும் மேற்கொண்டு அந்த சாதனையிலே படிப்படியான முன்னேற்றம் கண்டு பேரானந்தப் பெருநிலையை அடைவதே
ஆன்மீக சாதகர்களின் உயரிய நோக்கமாகும் .
" நினைத்துமடுப் பேற்றிவைக்க நெருப்புண்டோ வம்மானை "
என்பதாக வரும் 12 - ம் பாடல் வரியில் காணப்படும் நினைத்து என்ற வார்த்தை தியானம் என்பதையே குறிக்கின்றது .
வாசி யோகம் ( பிராணாயாமம் ) :
" பிராணாயாமம் என்ற வாசி யோகப் பயிற்சியின் மூலம் அண்டங்களின் ஆதார சக்தியாகத் திகழும் பிராணனை
வசப்படுத்துவதற்கு "யோகியர்கள் முயற்சி மேற்கொள்கின்றனர் . தெளிவாக கூறுவதாயின் , பிராணனை வசப்படுத்துவதே
பிராணாயாமம் ஆகும் " .
மனிதன் உட்சுவாசிக்கும் பன்னிரண்டு அங்குல பிராண வாயுவில் நான்கு அங்குலம் வீணே கழிந்து நஷ்டமாகி
விடுகின்றது . அவ்வண்ணம் வீணே கழியாது நான்கு அங்குல பிராண வாயுவை தக்க வைத்து வாசி யோக நெறியிலே
முன்னேறிச் செல்வதே யோகியரின் இலட்சியமாகும் .
" முன்னான்கு காலால் முதிர்ந்தெழுந்த வாசிதனை
முன்னான்கி லொன்றாய் முடுக்கறியா ரம்மானை
முன்னான்கி லொன்றாய் முடுக்கறிவா ராமாகில்
நண்ணாம் பயக்கூனில் நல்குமோ வம்மானை "
என்றவாறு 71 - ம் பாடலில் மேற்கண்ட வாசி யோகப் பயிற்சி முறையினை குறிப்பிடுகின்றார் .
மேற்கண்ட கருத்தினுக்கொப்ப ஞானியார் அப்பா அவர்கள் தாம் பாடிய ஞானத் தோத்திரம் என்னும் பகுதியில் இடம் பெற்ற
அல்ஹம்து லில்லாஹி என்ற பதிகத்தில் வருகின்ற மூன்றாவது பாடலில் பின் வருமாறு குறிப்பிடுகின்றார் .
" பத்தொடு ரண்டுவெளி - பாய்ந்தோடி - வாரதனில்
உத்தமம் நாலுவெளி - யோடுமெட் - டுட்புகுதும்
நித்தலும் ஓடுமந்த - நீதிச் - சரந்தனிலே
அற்றநா லுள்ளாக்கும் - அல்ஹம்து - லில்லாகி . "
காலனைக் கடத்தல் :
மூச்சுக் காற்றினை தம் கட்டுக்குள் வசப்படுத்தினதால் யோகியர் எமனையும் எதிர் கொள்கின்றனர்
என்பது இதன் கருத்தாகும் .
"காலன் றனைவெருட்டக் கட்டுண்டோ வம்மானை
கட்டிருந்தல் லோகாலன் தனைக்கடந்தா ரம்மானை . "
என்பதாக வரும் 21 - ம் பாடல் வரிகள் யோகியர் தம் அருந்திறத்தைக் காட்டுகின்றது .
" கால் பிடித்து மூலக் கனலை மதி மண்டலத்தின்
மேல் எழுப்பில் தேகம் விழுமோ பராபரமே "
என்று தாயுமானவர் பாடும் வரிகள் ஒப்பு நோக்கத் தக்கது .
மூலமறு நான்கு :
மூலமறு நான்கு என்பது 24 அட்சரங்களைக் கொண்ட " திருக்கலிமா " என்னும் முஸ்லிம் மூல மணி மந்திரமாகும் .
" மூல மறுநான்கின் முடிவுதனைக் கண்டிருந்தும்
நீலவிழிக் கண்மூடி நினையார்கா ணம்மானை "
என வருகின்ற 50 - ம் பாடல் வரிகளில் குறிப்பிடப்படுவது இக்கலிமா மந்திரமேயாகும் .
நாதம் - (ஒலி) :
ஒலி வடிவமாகிய பரம்பொருளை , ஒலியின் மூலமாகக் கேட்டு அந்த ஒலி உணர்விலேயே இறை இன்பத்தை
அனுபவிக்கலாம் என்பதும் சித்தர்களின் கோட்பாடுகளில் ஒன்றாகும் .
" நாத முறைந்திடமும் நந்தியிருந் தத்தலமும்
பாதமிருந் தாடிடமும் பரிவறியா ரம்மானை "
எனும் 33 - ம் பாடலில் சித்தர்களது ஒலியுணர்வுக் கோட்பாட்டினை குறிப்பிடுகின்றார் .
மேற்கண்ட கருத்தினை வலியுறுத்தும் விதமாக ஞானியர் அப்பா அவர்கள் தமது " ஞான காரணம் " நூற்பகுதியில் வரும்
நேரிசைவெண்பா ஒன்றில் ,
" கூறிவரும் ஞானக் குருபரனை நின்னுளமில்
மாறிடா தந்த வகைகண்டால் - தேறிவருஞ்
சத்தத்தைக் கண்டவர்கள் தானவனா கும்மெனவே
உற்றநபி சொன்னா ருகந்து "
என்பதாக குறிப்பிடுகின்றார் .
சுழுமுனை :
தியான யோகப் பயிற்சி முறையில் கூறப்படும் சுழுமுனை என்னும் பதத்தை நடுநிலை அல்லது நடுவிடம்
என்பதைக் குறிப்பிட பயன்படுத்துவர் .
" ஊன்றி யிழுத்தே யுருப்பட்டுறை வாகுமதில்
தாண்டிநடு வாகவொன்று தானிறைந்த தம்மானை "
என்ற 68 - ம் பாடலில் புருவ நடுவிடமாகிய சுழுமுனையைக் குறிப்பிடுகின்றார் .
மூலாதாரம் ( மூலம் )
" யோக நிலைப் பயிற்சியின் போது மூலாதாரத்தின் ( குண்டலினி ) மேல் தடையாக உள்ளதை விலக்கி
வைத்திட வேண்டும் " என்பர் .
" மூலத்தின் மேற்றோன்றும் முடிச்சதனைத் தானவிழ்த்து
எனத் துவங்கும் 53 - ம் பாடலில் ஞானியர் அப்பா அவர்கள் மேற்கண்ட கருத்தினைக் குறிப்பிடுகின்றார் .
" எழுப்பி மூலநாடியை இதப்படுத்த லாகுமே " எனத் துவங்கும் சிவவாக்கியர் பாடல் ஒப்பு நோக்கத் தக்கது .
அமுதம் :
சிரசினுள்ளே போடப்பட்டிருக்கும் பூட்டினைத் திறந்து அமுதம் உண்டு வீடு பேறு நாடுவர் ஞானியர் .
" உச்சி யறிந்தே யுட்பூட்டுத் தானறிந்து
குச்சியால் தாள்திறந்துக் கொள்ளறியா ரம்மானை
குச்சியால் தாள்திறந்துக் கொள்ளறிவா ராமாகில்
நச்சியமு துண்டுபொருள் நாடுமோ வம்மானை
நாடியல்லோ வுண்டொடுங்கி நன்றானா ரம்மானை . "
மேற்கண்ட 73 - ம் பாடலில் அமுதம் பற்றிய குறிப்பினைப் பாடுகின்றார் .
அழிவில்லா நிலை ( மரணமிலாப் பெருவாழ்வு ) :
மெய்ப்பொருளை உளத்தினால் தளர்வின்றி போற்றித் துதித்ததனால் ஞானியர் அழிவில்லா நிலையடைந்து
மேன்மையுற்றார்கள் .
" பழம்போற் பழம்பொருளைப் பழக்கறிவா ராமாகில்
உளம்போற் றுடையா துரைக்குமோ வம்மானை
உரைத்தல்லோ வழிவில்லா துறைந்திருந்தா ரம்மானை . "
என்ற 45 - ம் பாடலில் மேற்கண்ட அழிவில்லா நிலை பற்றிப் பாடுகின்றார் .
முடிப்புரை :
ஓதாதுணர்ந்த ஞானியார் அப்பா அவர்கள் திருவருளாலும் , தமது குருவருள் துணை கொண்டும் , இளமைக் காலம் முதலே
தாம் முயன்று தவம் புரிந்து பெற்றுக் கொண்ட பேரின்ப பெருநிலையை மனித சமூகம் பெற்றுய்யும் பொருட்டு தீந்தமிழில் தாம்
பாடியுள்ள ஞான அம்மானை நூலில் விவரித்துப் பாடியுள்ளார் .
ஞான அம்மானை நூலில் வழங்கப்பெறும் தியான , யோக ஞான நெறிமுறை பயிற்சிகளைச் சார்ந்த பரிபாஷை ( குழுஉக்குறி )
களுக்கு குரு பாரம்பரிய வழி முறையில் வழங்கி வருகின்ற உத்தேசக் கருத்துரைகளை தக்கவர்களிடம் கேட்டறிந்து எடுத்தாளப்பட்டுள்ளது .
- இல்லம்
- நம்மைப்பற்றி
- வரலாற்றுக்குறிப்புகள்
- ஞான அம்மானை
- இலக்கிய உத்திகள்
- சாஹிபு பாடல்கள்
- புகைப்படங்கள்
- முகவரி
மர்ஹும் V.S.T. சம்சு தாஸீன் (நிறுவனர்)
மர்ஹும் V.S.T. செய்யது தாமீம்
ஹஸரத் ஞானியர் அப்பா தர்கா பள்ளியில் திருப்பாடல், பணிவிடை நடைபெறும் விசேஷ இரவுகள்
- பிரதி வியாழன் மாலை வெள்ளி இரவுகள்
- நிறை பிறை இரவு
- 14 ஆம் இரவு
- மகான்கள் நினைவு தினங்கள்